சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
வழக்கமாக சென்னை அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட்தான் ஓப்பனராக இறங்குவார். ஆனால், இன்று ருத்துராஜூக்கு பதில் அஜிங்கியா ரஹானே ஓப்பனராக இறங்கியிருக்கிறார். இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன?

ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணிக்குள் வந்த புதிதில் மிடில் ஆர்டரில் இறங்கியிருக்கிறார். ஆனால், அந்த பொசிசனில் அவர் சரியாக பெர்பார்ம் செய்ததே இல்லை. அந்த சமயத்தில்தான் ருத்துராஜ் போன்ற இளம் வீரர்களை குறிப்பிட்டு இவர்களுக்கு ஸ்பார்க் இல்லை என தோனி விமர்சித்திருப்பார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் தோனியே ருத்துராஜை ஓப்பனராகினார். அந்த இடத்தை அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அதன்பிறகு, கடந்த மூன்று சீசன்களாக அவர்தான் சென்னை அணியின் ஓப்பனர். இப்போது சென்னை அணியின் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஆனால், இப்போது திடீரென மும்பைக்கு எதிராக தன்னுடைய ஆர்டரை இறக்கிக் கொண்டு ரஹானேவை ஓப்பனராக இறக்கியிருக்கிறார். இதற்கான காரணம் என்னவென நாமே கொஞ்சம் யூகிக்கலாம்.
ரஹானே மும்பை மண்ணின் மைந்தன். வான்கடே அவரின் சொந்த மைதானம். சமீபத்தில் நடந்த ரஞ்சிக் கோப்பையைக் கூட மும்பை அணிக்காக கேப்டனாக இருந்து வென்று கொடுத்திருக்கிறார். வான்கடேவின் சூழல்களை நன்கு அறிந்தவர். இங்கு நன்றாக பேட்டிங் ஆடிக்கூடியவர். கடந்த சீசனில் வான்கடேவில் நடந்த போட்டியில் கூட 27 பந்துகளில் 61 ரன்களை அடித்திருப்பார். மும்பைக்காரர். இந்த மைதானத்தில் நன்றாக ஆடக்கூடியவர் என்பதற்காக அவர் ஓப்பனராக்கப்பட்டிருக்கலாம்.

மேலும், இந்த சீசனில் ருத்துராஜின் ஸ்ட்ரைக் ரேட்டும் பேசுபொருளாகியிருந்தது. இதுவரை 155 ரன்களை அடித்திருக்கும் ருத்துராஜின் ஸ்ட்ரைக் ரேட் 117 தான். வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம். இங்கு 200 க்கு அதிகமான ரன்களை அடித்தால் கூட வெற்றியை உறுதியாக சொல்ல முடியாது. அப்படியிருக்க, பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டுமெனில் நல்ல வேகமான தொடக்கம் கிடைக்க வேண்டும். அதற்காகவே ருத்துராஜூக்கு முன்பாக ரஹானே இறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சென்னை அணியின் இந்த முடிவு சரியான பலனை அளிக்கவில்லை. ரஹானே 8 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே அடித்து அவுட் ஆகியிருக்கிறார்.
இந்த காரணமெல்லாம் இல்லாமல் வேறு காரணங்களும் இருக்க வாய்ப்பிருக்கிறது. இன்னிங்ஸ் ப்ரேக்கில் சென்னை சார்பில் எதாவது வீரர்கள் பேசும்போதுதான் உண்மையான காரணம் தெரியவரும்.