Sex & Pregnancy: `மனைவி மாசமா இருக்கிறப்போ செக்ஸ் வெச்சுக்கலாமா?'- காமத்துக்கு மரியாதை – 159

தாம்பத்திய உறவு தொடர்பான சில சந்தேகங்கள் எல்லா காலங்களிலும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அதிலொரு முக்கியமான சந்தேகம், ‘மனைவி மாசமா இருக்கிறப்போ செக்ஸ் வெச்சுக்கலாமா’ என்பதுதான். இந்த வாரம் இதற்கான விளக்கத்தைத்தான் சொல்லவிருக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

”கர்ப்ப கால செக்ஸ் பற்றிய நிறைய குழப்பங்கள் தம்பதிகள் மத்தியில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் (முதல் டிரைமெஸ்டர்) வரை தாம்பத்திய உறவே வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் பெரும்பாலான தம்பதிகள் தீர்மானமாக இருக்கிறார்கள். காரணம், இந்த மாதங்களில் உறவு வைத்துக்கொண்டால் வயிற்றில் இருக்கிற கரு கலைந்துவிடுமோ என்கிற அச்சம். உண்மையில் இப்படி நிகழாது. ஏனென்றால், கருத்தரித்த ஆரம்பத்தில் கருவானது கண்ணுக்கே தெரியாத அளவில்தான் இருக்கும். டெஸ்ட் டியூப் பேபிக்கு முயற்சி செய்கையில், கண்ணுக்கே தெரியாத அக்கருவை மைக்ரோஸ்கோப் வழியாகத்தான் மருத்துவர்கள் பார்ப்பார்கள். அந்தளவுக்குச் சிறிதான கரு, தாம்பத்திய உறவின்போது நிகழ்கிற உடல் அசைவுகளால் கலையாது.

Sex & Pregnancy

கர்ப்பமாக இருக்கையில் தாம்பத்திய உறவுகொள்வது கணவன், மனைவி, வயிற்றில் இருக்கும் கரு என மூவருக்குமே நல்லது. குறிப்பாக கணவனும் மனைவியும் நல்ல மனநிலையுடன், மகிழ்ச்சியாக இருக்க தாம்பத்திய உறவு உதவும். தவிர, உறவு கொள்ளும்போது மூளையிலிருந்து மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கும். அது தாய்க்கும் சேய்க்கும் நல்லது.

முதல் டிரைமெஸ்டர் போலவே இரண்டு மற்றும் மூன்றாவது டிரைமெஸ்டர்களிலும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். இதில் அனைத்து தம்பதியரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவலொன்று இருக்கிறது. அதாவது, கர்ப்பம் உறுதியானவுடனே ‘இந்தத் தேதியில் பிரசவம் நிகழலாம்’ என்று, ஒரு தேதியைக் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பார்கள் மகப்பேறு மருத்துவர்கள். அந்தத் தேதிக்கு முன்னாலும் பிரசவம் நிகழலாம், பின்னாலும் நிகழலாம். மகப்பேறு மருத்துவர் குறித்துக்கொடுத்த தேதியைத் தாண்டியும் பிரசவ வலி ஏற்படவில்லையென்றால், அதற்கான தீர்வாகவும் செக்ஸ் பயன்படலாம்.

Dr. Kamaraj

அதாவது, குறிப்பிட்ட நாள் தாண்டியும் பிரசவ வலி வரவில்லையென்றால் சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளுக்கு புரோஸ்டாகிளாண்டின்ஸ் (prostaglandins) என்ற மருந்தைத் தந்து சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்வார்கள் மகப்பேறு மருத்துவர்கள். இந்த மருந்து கர்ப்பப்பையின் வாயை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது. இதே புரோஸ்டாகிளாண்டின்ஸ் ஆணின் விந்திலும் இருக்கிறது. பிரசவ தேதி நெருங்கும்போதும் தம்பதியர் உறவுகொண்டால், விந்தில் இருக்கிற புரோஸ்டாகிளாண்டின்ஸ் கர்ப்பப்பையின் வாயை விரிவடையச் செய்து, பிரசவ வலியை ஏற்படுத்திவிடும். இதனால், சுகப்பிரசவம் நிகழவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

சொல்லப்பட்ட பிரசவ தேதி தாண்டியும் வலி வரவில்லையென்றால், பதற்றப்படாமல் தாம்பத்திய உறவுகொண்டாலே போதும். அதே நேரம், இரண்டு விஷயங்களை தம்பதியர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, மனைவியின் வயிற்றில் அழுத்தம் கொடுக்காமல் பொசிஷனை மாற்றி உறவுகொள்ள வேண்டும். இரண்டு, வழக்கம்போல குழந்தையின் அசைவை அடிக்கடி கண்காணித்துக்கொண்டும் இருக்க வேண்டும். மற்றபடி, கர்ப்ப காலம் முழுவதும் தாம்பத்திய உறவு கொள்ளலாம். அதனால் எந்தப் பிரச்னையும் வராது” என்றவர், யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

”தாய்க்கும் கருவிலிருக்கும் சேய்க்கும் இணைப்பாக இருக்கும் நஞ்சு (பிளாசன்டா) கீழே இறங்கியிருந்தால், அதாவது கர்ப்பப்பை திறக்கும் இடத்தில் அந்த நஞ்சு இருந்தால் உறவைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களும் கர்ப்ப கால செக்ஸை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் லேசான ரத்தப்போக்கு இருக்கிற பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படலாம். இப்படிப்பட்ட பெண்களும் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

`கர்ப்பப்பையில் கிருமித்தொற்று ஏற்படலாம்’ என்று அறிவுறுத்தப்பட்ட கர்ப்பிணிகளும் செக்ஸை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் கர்ப்ப காலம் முழுதும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்” என்கிறார் டாக்டர் காமராஜ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.