மும்பை: மும்பையில் காணாமல் போன, மனவளர்ச்சி குன்றிய 12 வயது சிறுவன், கியூஆர் கோடு டாலர் செயின் உதவியால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தான்.
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையின் வொர்லி பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 12 வயது சிறுவன் கடந்த வியாழக் கிழமை மாலை தங்கள் வீட்டுக்கு அருகில் பிற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் சிறுவனை திடீரென காணவில்லை. பெற்றோர் அக்கம்பக்கத்தில் சிறுவனை தேடி வந்தனர். எனினும் சிறுவனைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மும்பை கொலாபாவில் ரீகல் சினிமா சந்திப்பு அருகில் மனவளர்ச்சி குன்றிய சிறுவன் தனியே திரிவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று சிறுவனை மீட்டனர்.
இந்நிலையில் சிறுவன் அணிந்திருந்த செயின் டாலரில் கியூஆர் கோடு பொறிக்கப்பட்டிருப்பதை அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார். அதனை அவர் தனது செல்போன் மூலம் ஸ்கேன் செய்ததில் பெற்றோரின் தொலைபேசி எண்கள் கிடைத்தன.
இதையடுத்து பெற்றோரை தொடர்பு கொண்ட போலீஸார், விவரங்களை சரிபார்த்த பிறகுஅவர்களிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.
மனவளர்ச்சி குன்றிய சிறுவன் காணாமல் போன பிறகு 6 மணிநேரத்துக்குள் மீண்டும் பெற்றோருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளான். தொழில்நுட்ப வளர்ச்சியே இதனை சாத்தியமாக்கியது குறிப்பிடத்தக்கது.