சூர்யாவின் `ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் `வேட்டையன்’. இதையடுத்து ரஜினி, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தனது 171வது படத்தில் நடிக்கிறார்.
தற்போது உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தில் பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அமிதாப் பச்சன் கெளரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். ரஜினி, இப்படத்தை முடித்தக் கையோடு லோகேஷ் கனகராஜின் படத்திற்குச் செல்வதால், ‘வேட்டையன்’ படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகவுள்ள ‘தலைவர் 171’ படத்தின் போஸ்டர் வெளியாகியிருந்தது. அதில் கடிகாரங்கள், டைம் மெஷின் எனப் பல குறியீடுகள் இருந்தது பேசுபொருளாகியிருந்து.
இந்நிலையில் அந்தப் படத்தின் டைட்டில் அப்டேட் ஒரு டீசருடன் தற்போது வெளியாகியிருக்கிறது. தங்கக் கட்டிகள், தங்கக் கடிகாரங்கள் எனத் தங்கக் கொள்ளையை மையமாகக் கொண்டு வெளியாகவுள்ள இந்த டீஸரில் இப்படத்துக்கு ‘கூலி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, இந்த டீஸரில் RX பைக் சத்தத்துடன் கொள்ளையர்களின் கூடாரத்திற்கு வரும் ரஜினி, சட்டரை உடைத்து எண்ட்ரி கொடுக்கிறார். வின்டேஜ் ரஜினியின் புகழ்பெற்ற, `சோறு உண்டு, சுகம் உண்டு, மது உண்டு, மாது உண்டு, மனம் உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு போடா’ என்ற வசனமும் இதில் இடம்பெற்றுள்ளது.