உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினால் அனுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் கருத்தறியும் பணிகள் முன்னெடுப்பு

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினால் (ISTRM) அனுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் கருத்தறியும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நிலையான கட்டமைப்பை தயாரிப்பதற்கான செயன்முறைக்கு பொதுமக்களின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலகத்தின் பணிப்பாளர் நாயகம், அதிகாரிகள், மகா சங்கத்தினர், அனுராதபுரம் மறை மாவட்ட பேராயர் மாஷல் அந்தாதி, அனுராதபுரம் முஸ்லிம் பள்ளிவாசல் மௌலவி அப்துல் கயூம் தலைமையிலான குழுவினர் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்தனர்.

இவர்களுக்கு மேலதிகமாக, நொச்சியாகம, மஹவிலச்சிய பிரதேசவாசிகள், பிரதேச செயலாளர்கள், கிராம அதிகாரிகள், அனுராதபுரம் மாவட்டச் செயலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் உள்ளிட்ட குழுவினர், அனுராதபுர சிவில் செயற்பாட்டாளர்கள், பிரதேச முப்படை அதிகாரிகள், அனுராதபுரம் சிரேஷ்ட பொலிச் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், ஊடகவியாலளர்கள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் செயலகம் மற்றும் ஜனசபா அலுவலகத்தின் அதிகாரிகள், மதவாச்சி பிரதேசத்தில் யுத்தத்தில் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தவர்கள், எலவக, மஹகொன்கஸ்கட பிரதேசவாசிகள், கெபதிகால்லாவ மற்றும் ஹொரவ்வொத்தானை பிரதேச செயலக பிரிவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது வடக்கு கிழக்கில் ஏற்பட்ட மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், அதனால் ஏற்பட்ட பயங்கரமான அனுபவங்கள், எதிர்காலத்தில் அவ்வாறு நடப்பதை தடுப்பதற்கான அவசியம் உள்ளிட்ட நோக்கங்களை அடைவதற்கான சுயாதீன அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

உத்தேச ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கான அதிகாரங்களை கொண்டிருப்பதன் முக்கியத்துவம் மற்றும் முன்னர் சமாதானத்திற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து, உத்தேச சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகள் எவ்வாறு வேறுபட போகின்றன என்பது தொடர்பிலான தௌிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறான யுத்த சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ள 26 நாடுகளில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போருக்குப் பின்னர் நிலைமாறுகால நீதியின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்வதற்கான இடைக்கால செயலகம் 12 நடைமுறையில் இருப்பதோடு நிகழ்வுகள் தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து வருகின்றது.

அந்த நாடுகளின் அனுபவங்களின் அடிப்படையில் நமக்கான வழிகாட்டுதல்களை அமைப்பதன் முக்கியத்துவம், உத்தேச ஆணைக்குழுவின் உள்ளடக்கத்திற்கு அமைய, பணிப்பாளர்கள் மற்றும் செயலகத்திற்கு மேலதிகமாக, உள்நாட்டு, வௌிநாட்டு நிபுணர்கள் உள்ளடங்கிய ஆலோசனைக் குழு ஆகியவற்றை இந்தச் செயலகம் உள்ளடக்கியிருக்கும் என்பதோடு, பொறுப்புக்கூறலை அடிப்படையாக கொண்டதாக அமையப்பபோகும் இந்தச் செயலகத்தின் சுயாதீனத் தன்மை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

அதற்கமைய, பாராளுமன்ற சட்டத்தின் மூலம் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள், அதனை அமைப்பதற்கான பணிகளின் உண்மைத் தன்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் வகிபாகம், 2024 ஜனவரி 01 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்டத்தின் முக்கியமான விடயங்கள் மற்றும் உத்தேச சட்டம் மற்றும் பொறிமுறையின் முக்கிய அம்சங்கள் தொடர்பிலான பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துக்களை அறிதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன்போது, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயலகத்தின் அதிகாரிகள் குழுவினால் 1983 – 2009 வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட இன மோதல், அதனுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட பாதிப்புக்களை ஈடுசெய்வதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகள் தற்போதும் வர்த்தமானி பத்திரமாக மாத்திரமே காணப்படுவதால், மேற்படி குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து அந்தச் சட்டமூலத்தை மேலும் வலுப்படுத்தி திருத்தங்களை செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு குறித்தும் பங்குதாரர்களுக்கு தௌிவூட்டப்பட்டது.

அதேபோல் அனுராதபுரம் மக்களின் பிரச்சினைகள் மற்றும் யுத்தம் முடிந்திருந்தாலும் அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் உரிய அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என இந்த சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டது.

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்சே, ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி (கொள்கை) ஆசிப் பௌட், நிறைவேற்று அதிகாரி (மக்கள் தொடர்பாடல்) தனுஷி டி சில்வா, நிறைவேற்று அதிகாரி (மக்கள் தொடர்பாடல்) சட்டத்தரணி சௌமிய விக்கிரமசிங்க, சட்டத்தரணி நவீந்திர பொன்சேகா (சட்டப் பிரிவு) மற்றும் இணைப்பாளர் காமினி வித்யாரத்ன உள்ளிட்டோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.