பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை நீக்குவதா? – செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: “தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்கியிருக்கிறது. இது வரலாற்று சுவடுகளை அப்பட்டமாக மூடி மறைக்கிற செயல்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மிர்பாஹீ என்பவரால் அயோத்தியில் கட்டப்பட்ட பாபர் மசூதி இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தளமாக தொடர்ந்து இருந்தது. 1949 டிசம்பரில் பாபர் மசூதி தாழ்வாரத்தில் தான் ராமர் பிறந்தார் என்று கூறி உரிமை கொண்டாட இந்துத்துவ அமைப்புகள் முயற்சி செய்தன.

இதையொட்டி பாபர் மசூதி சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. நீதிமன்ற வழக்குகள் என ஆரம்பித்து பாரதிய ஜனதா கட்சி அங்கே ராமர் கோவில் கட்டுவதை தனது அரசியல் நோக்கமாக பிரகடனம் செய்தது. அதற்காக கரசேவை என்ற போர்வையில் ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினார்கள்.

இது குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பில் பாபர் மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் அதே நேரத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்பு, நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும், சிறுபான்மை சமுதாயத்தினருக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆனாலும் அமைதியை விரும்புகிற சிறுபான்மை மக்கள் அந்த தீர்ப்புக்கு எதிராக போராட்டம் எதுவும் நடத்தாமல் அமைதியாக இருந்தார்கள். இது அவர்களது சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து நரேந்திர மோடி ஆட்சியில் அங்கு ராமர் கோவில் சமீபத்தில் கட்டப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டது.

இந்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்கியிருக்கிறது. இது வரலாற்று சுவடுகளை அப்பட்டமாக மூடி மறைக்கிற செயலாகும். இப்படி நீக்குவதன் மூலமாக வரலாற்றில் இருந்து பாபர் மசூதியை நீக்கிவிடலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கருதுகிறது.

இதன் மூலம் ஒன்றிய பாஜக ஆட்சிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நரேந்திர மோடி அரசு வரலாற்றிலிருந்து பாபர் மசூதியை நீக்கும் திரிபுவாதங்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையுமாக கண்டிக்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.