தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் மழை காரணமாக நிறைய போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
மழையின் காரணமாக இந்தியா மற்றும் கனடா விளையாடவிருந்த போட்டி அவுட் ஃபீல்டு பகுதியில் மழைநீர் தேங்கியிருந்ததால் கைவிடப்பட்டது. அதேபோல பாகிஸ்தானின் அடுத்தச்சுற்று வாய்ப்பை நிர்ணயிக்க இருந்த அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியும் மழை நீர் தேங்கியிருந்த காரணத்தால் கைவிடப்பட்டது. இந்த இரண்டு போட்டிகளும் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடாவில் நடைபெற இருந்தது. அங்கு கடுமையான மழை பெய்து வருவதால் இந்த இரண்டு போட்டிகளும் கைவிடப்பட்டன.

தொடர்ந்து முக்கிய போட்டிகள் மழையால் கைவிடப்பட்டு வருவதால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். சரியான வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் குட்டை போல ஆங்காங்கே தேங்கி இருந்தது. அதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போதும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் சரியான ஏற்பாடுகளை செய்யாத ஐசிசியை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய கவாஸ்கர்,” மொத்த மைதானத்தையும் மூடுவதற்குத் தேவையான கவர் வசதிகள் இல்லாத மைதானத்தில் ஐசிசி போட்டியை நடத்தக் கூடாது. முழு மைதானத்தையும் மூடும் வகையில் கவர்களை வைத்திருக்க வேண்டும். இந்தப் போட்டிகளை நடத்துவதன் மூலம் நிச்சயம் உங்களுக்கு பணம் கிடைக்கும். அதனால் உங்களிடம் பணம் இல்லை என்று சொல்ல முடியாது.

ரசிகர்கள் வெகுதூரத்தில் இருந்து போட்டிகளைக் காண வருகிறார்கள். அவர்களுக்கு நல்ல கிரிக்கெட்டை விருந்தாக்க வேண்டும். அமெரிக்காவில் இத்தனை ஸ்டார் வீரர்கள் ஆடும் தொடரை இனி எப்போது ரசிகர்கள் பார்க்க முடியும்.’ என்று கூறியிருக்கிறார்.