கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்த விவாகாரத்தில், கைதான கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் மற்றும் சின்னதுரை ஆகிய 4 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் கொத்துகொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டதும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். சின்னத்துரை என்பவர், மெத்தனால் கலந்த சாராயத்தை தன்னிடம் விற்றதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, கோவிந்தராஜின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரனிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். சின்னதுரையும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் மற்றும் சின்னதுரை ஆகிய 4 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.