சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் அசாமில் ஆம் ஆத்மி கட்சி கலைக்கப்படுவதாக அறிவிப்பு

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஆம் ஆத்மி கட்சி கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் அக்கட்சி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: “அசாம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு, ஆம் ஆத்மி கட்சி அசாம் மாநிலத்தில் உடனடியாக கலைக்கப்படுகிறது.

கட்சியை மறுகட்டமைப்பு செய்து வலிமைப்படுத்தும் பணிகளை மேற்பார்வையிட ஒரு செயற்குழு உருவாக்கப்படுகிறது” இவ்வாறு அக்கட்சி தெரிவித்துள்ளது,.

அசாம் மாநிலத்துக்கு வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேர்வை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு மொத்தம் 126 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

முன்னதாக அசாம் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 90 முதல் 100 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் பாஜக 9 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான அசோம் கண பரிஷத் (ஏஜிபி) ஒரு இடத்திலும், யுபிபிஎல் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி மூன்று இடங்களில் வெற்றி பெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.