வரலாற்றில் முதன்முறையாக இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை ரக்பி வீரர்களுக்கு அண்மையில் (13) கொழும்பு ஹெவ்லொக்ஸ் மைதானத்தில் காப்புறுதித் திட்டம் ஒன்று வழங்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் கருத்தின்படி இது மேற்கொள்ளப்பட்டதுடன், இந்த காப்புறுதி இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக செயல்படுத்தப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நீண்டகால அர்ப்பணிப்பின் அடிப்படையில் அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக கொழும்பு இசிபதன வித்தியாலயத்திற்கு கையளிக்கப்பட்ட ஹெவ்லொக் டவுன் ஹென்றி பெட்ரிஸ் விளையாட்டு மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக, பாடசாலை ரக்பி வீரர்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டதோடு, ரக்பி நடுவர்கள் சங்கத்தின் முன்னேற்றத்திற்காக 50 இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கப்பட்டது. இதனூடாக பயிற்சி பட்டறைகள், நடுவர் திறன் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கு கடந்த ஆண்டு பாடசாலை ரக்பி போட்டியின் போது விபத்துக்குள்ளான புனித ஜோசப் கல்லூரி எச்.ஐ.சி. சொய்சா வீரருக்கு 10 இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.