`மாடர்ன் கிரிக்கெட்டின் ரன் மெஷின்’ என்றழைக்கப்படும் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, ஜனவரி 30-ம் தேதியன்று ரயில்வேஸ் அணிக்கெதிரான ரஞ்சி டிராபியில் களமிறங்கினர்.
கோலியின் வருகையால் டெல்லி அருண் ஜெட்லி மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. முதல் நாளில் கோலி களமிறங்கும் சூழல் அமையாததால், அவரின் ஆட்டத்தைக் காண்பதற்காகவே இரண்டாவது நாளும் ரசிகர்கள் குவிந்தனர்.

அதற்கேற்றாற்போல, பெரும் ஆர்ப்பரிப்புக் குரல்களுக்கு மத்தியில் கோலியும் களமிறங்கினார். ஆனால், அந்த ஆர்ப்பரிப்புகளையெல்லாம் ரயில்வேஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹிமான்ஷு சங்வான் வீசிய பந்து கோலியின் பேட்டிலிருந்து மிஸ்ஸாகி ஆஃப் ஸ்டம்ப்பை பறக்கவிட்டு அமைதியாக்கியது. அதேசமயம், மூன்றாவது நாளில் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இருப்பினும், போட்டி வெற்றி தோல்வியைக் கடந்து விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய ஹிமான்ஷு சங்வான் பேசப்பட்டார். போட்டி முடிந்தபிறகு, ஹிமான்ஷு சங்வான் நேராக விராட் கோலியிடம் பந்தில் ஆட்டோகிராஃப் வாங்கச் சென்றார்.
Kohli giving autograph to Himanshu Sangwan,Most Down to Earth cricketer pic.twitter.com/1dGGQQzQQo
— Ultimate VK Fan (@UltimateVKFan) February 2, 2025
அப்போது, தன்னை அவுட்டாக்கிய டெலிவரி குறித்து அவரிடம் பேசிய விராட் கோலி, “என்ன மாதிரியான பந்து அது… அருமையான டெலிவரி. நான் மிகவும் ரசித்தேன். உங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல பந்துவீச்சாளர் நீங்கள். உங்களின் எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்.” என்று கூறி பந்தில் ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்தார்.
ரஞ்சியில் ரயில்வேஸ் அணிக்காக விளையாடிவரும் ஹிமான்ஷு சங்வான், 19 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லியில் முன்பு விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.