அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின், அந்த நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். கடந்த மாதம் ஜனவரி 20-ம் தேதி, 104 இந்தியர்கள் கை கால்கள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கை, கால்கள் விலங்கிடப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாதமானது. இந்த நிலையில், 2-வது கட்டமாக நேற்றிரவு 11.35 மணியளவில் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு, 119 அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். இன்று 3-வது அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் வந்தடைய உள்ளது. இந்த விமானத்தில் 157 இந்தியர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களை ஏற்றிவரும் அமெரிக்க விமானம் இந்திய ராஜதந்திரத்திற்கு ஒரு சோதனையாகவே இருக்கும். அமிர்தசரஸில் இன்று தரையிறங்கும் அமெரிக்க விமானத்தின் மீது அனைவரின் பார்வையும் இருக்கும். நாடுகடத்தப்பட்டவர்கள் கைவிலங்கு போடப்பட்டு, அவர்களின் கால்கள் கட்டப்பட்டு அழைத்து வரப்படுகிறார்களா என இந்த நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.