சாம்பியன்ஸ் டிராபி வீரர்களுக்கு ஆபத்தா? வெளிநாட்டினரை கடத்தும் பயங்கரவாதிகளின் பிளான் அம்பலம்!

ICC Champions Trophy 2025 Pakistan: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப். 19ஆம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் உள்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி மட்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்திய அணி துபாயில் அதன் அனைத்து போட்டிகளையும் விளையாடுகிறது.

அதாவது, இந்திய அணியுடன் விளையாட அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் இருந்து துபாய் வர வேண்டும். சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிக்குக் கூட துபாய் வந்துதான் நேற்று (பிப். 23) மோதியது. இந்திய அணி விளையாடும் அரையிறுதிப் போட்டியும் சரி, இறுதிப்போட்டியும் சரி துபாயிலேயே நடைபெறும்.

பிடிவாதம் பிடித்த இந்தியா… ஓகே சொன்ன பாகிஸ்தான்

இதற்கு காரணம் என்னவென்றால் இந்திய அணிக்கு பாகிஸ்தானில் போதிய பாதுகாப்பு இல்லை என கருதப்பட்டது. அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டோம் என முடிவில் பிசிசிஐ பிடிவாதம் பிடித்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரியளவுக்கு போராடி பார்த்தும் இந்திய அணி துபாயில் விளையாடும் என்றே முடிவே எடுக்கப்பட்டது. இதனால், இனி இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் பங்கேற்க பாகிஸ்தான் இங்கு சுற்றுப்பயணம் செய்யாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை

இதுஒருபுறம் இருக்க, தற்போது பாகிஸ்தான் உளவுத்துறை தரப்பில் இருந்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் லாகூர், ராவில்பிண்டி, கராச்சி ஆகிய நகரங்களில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகளை காண வரும் வெளிநாட்டு பயணிகளை கடத்துவதற்கு பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளின் திட்டம் இதுதான்?

இஸ்லாமிக் ஸ்டேட் கோரசன் மாகாணம் (ISKP), தெஹ்ரிக்-இ தாலிபான் பாகிஸ்தான் (TTP), ஐஎஸ்ஐஎஸ் (ISIS), பலுசிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட குழுக்கள் உள்ளிட்ட பயங்கரவாத குழுவினரிடம் இருந்து வெளிநாட்டு பயணிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால், கிரிக்கெட் வீரர்களுக்கும், போட்டிகள் நடக்கும் மைதானத்திற்கும் பாதுகாப்பை அதிகப்படுத்த பாதுகாப்பு படையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பயங்கரவாத குழுவினர், முக்கிய நகரங்களின் புறநகர் பகுதிகளில் உள்ள பாதுகாப்பான வீடுகளை தேர்வுசெய்து அதனை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், கேமரா கண்காணிப்பு இல்லாத இடங்களையும், ரிக்‌ஷா அல்லது மோட்டார் சைக்கிள் மூலம் மட்டுமே அணுகக்கூடிய இடங்களையும் வேண்டுமென்றே அவர்கள் தேர்வு செய்து வருவதாகவும் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தப்பிக்க, கடத்தப்பட்ட நபர்களை இரவில் அவர்கள் தேர்வு செய்த வீடுகளுக்கு கொண்டுச்செல்ல பயங்கரவாதக் குழு திட்டமிட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல், 2024ஆம் ஆண்டு ஷாங்லாவில் சீன பொறியாளர்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் பாகிஸ்தானில் வெளிநாட்டவர்கள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல் ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.