வாக்காளர் நலனுக்காகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உறுதி

மதுரை: எப்போதும் வாக்காளர்கள் நலனுக்காகத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்தார்.

மதுரைக்கு நேற்று காலை விமானம் மூலம் வந்த ஞானேஸ்குமார், அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற, 10 தொகுதிகளுக்கான தேர்தல் பணி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் ஞானேஸ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் தேர்தல் பணி தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினேன். 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமையாகும். வாக்களிப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மதுரையில் தேர்தல் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் எப்போதும் வாக்காளர்கள் நலனுக்காகத்தான் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, மாநகராட்சி ஆணையர் சித்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தனது மனைவியுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கார் மூலம் ராமேசுவரத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.