நூற்றாண்டு பழைமை வாய்ந்த தாவரவியல் பூங்காவான ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் ஹாலந்து நாட்டு துலிப் மலர்கள் முதல் ‘குயின் ஆஃப் சைனா’ என வர்ணிக்கப்படும் பவுலேனிய பூக்கள் வரை நூற்றுக்கணக்கான மலர் ரகங்களைப் பராமரித்து வருகின்றனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கப்பல்களின் மூலம் மலர் நாற்றுகளைத் தருவித்து, இங்கு அறிமுகம் செய்தனர். இன்றளவும் புதிய, புதிய மலர் ரகங்களை அறிமுகம் செய்யத் தோட்டக்கலைத் துறையும் ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த வரிசையில் முதன் முறையாக நெதர்லாந்து டஃபோடில்ஸ் மலர்களை ஊட்டி பூங்காவில் அறிமுகம் செய்திருக்கிறது தோட்டக்கலைத் துறை.

வில்லியம் வோட்ஸ்வெர்த் முதலான பல ஆங்கில கவிஞர்களால் கொண்டாடி எழுதப்பட்ட இந்த மஞ்சள் மலர்களை 2 ஆயிரம் பூந்தொட்டிகளில் தற்போது நடவு செய்துள்ளனர். காண்போரைக் கவர்ந்திழுக்கும் இந்த டஃபோடில்ஸ் மலர்கள் ஒவ்வொன்றாகத் தற்போது பூக்கத் தொடங்கியுள்ள நிலையில், கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு மொத்தமாக விருந்து படைக்கத் தயாராகி வருகின்றன.
இது குறித்துத் தெரிவித்த பூங்கா அதிகாரிகள், “இந்த முறை கோடை சீசனுக்குப் புதிய அறிமுகமாக டஃபோடில்ஸ் மலர்ச் செடிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹாலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளில் காணப்படும் டெப்போடில் மலர்கள் மிகவும் பிரபலமானவை. ஆங்கில கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வெர்த் உள்ளிட்ட பல கவிஞர்கள் இம்மலர் குறித்து எழுதிய கவிதைகள் மிகவும் பிரபலமானவை.

இந்தியாவில் காஷ்மீரில் மட்டுமே இந்த மலர்ச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், முதன் முறையாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. வசந்த காலத்தை வரவேற்கும் மலர்களாகக் கருதப்படும் இந்த மலர்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ” என்றனர்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel