புதுடெல்லி: நோய்த் தடுப்பு, குணப்படுத்துதல், மறுவாழ்வு அளிக்கும் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவது ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு தொடர்பான சர்வதேசக் கருத்தரங்கை ஜே.பி. நட்டா இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார். உலக சுகாதார அமைப்பு (WHO), உலகளாவிய மேம்பாட்டு மையம் (CGD) ஆகியவற்றுடன் இணைந்து, சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறை (DHR) சார்பில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய நட்டா, “இந்தியாவின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதிலும், அனைவருக்கும் குறைந்த செலவில் சுகாதார சேவையை உறுதி செய்வதிலும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளார். உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (UHC) இலக்குகளுடன் இணைந்து, திறமையான, சமமான, உயர்தர சுகாதார அமைப்பை உருவாக்க ஆதாரத்தின் அடிப்படையில் கொள்கைகளை வகுப்பதை முன்னெடுப்பதில் சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு (HTA) முக்கிய பங்கை வகிக்கிறது.
குணப்படுத்துதல், நோய்த் தடுப்பு, மறுவாழ்வு அளிக்கும் சுகாதார சேவை ஆகியவற்றை வழங்குவதில் அரசு கவனம் செலுத்துகிறது. ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை சுகாதார பராமரிப்புக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதுவரை 22 அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ், எம்டி இடங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. துணை மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கான பயிற்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நமது பிரதமரின் எதிர்பார்ப்புப்படி 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைவதில், சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு முக்கிய பங்கு வகிக்கும்” என்று தெரிவித்தார்.