RCB vs PBKS : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி IPL 2025 தொடரில் மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது RCB. மழை காரணமாக இந்த போட்டி 14 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்ற நிலையில், RCB தனது சொந்த மைதானமான எம். சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மூன்றாவது தோல்வியை பதிவு செய்துள்ளது.
வரலாற்றில் முதல் இடத்தை பிடித்த RCB
இந்த தோல்வியுடன் RCB ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது. சொந்த மைதானத்தில் அதிகபட்ச தோல்விகளை சந்தித்த முதல் ஐபிஎல் அணி எனும் மோசமான சாதனை இப்போது RCBக்கு கிடைத்துள்ளது. சின்னசுவாமி ஸ்டேடியத்தில் இதுவரை 46 போட்டிகளில் தோல்வி கண்டுள்ள RCB, இந்த மோசமான சாதனையில் முதலிடத்தில் இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியை பின்னுக்கு தள்ளியுள்ளது. டெல்லி மைதானத்தில் டிசி அணி 45 தோல்விகள் அடைந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் வரலாற்றில் எந்த ஒரு அணியும் தனது சொந்த மைதானத்தில் இவ்வளவு அதிகமான தோல்விகளை சந்தித்ததில்லை.
சொந்த மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த ஐபிஎல் அணிகளின் பட்டியல்
தற்போது சொந்த மைதானத்தில் அதிகபட்ச தோல்விகள் கண்ட அணிகளின் பட்டியலில் முதலிடத்தில் RCB அணி 46 தோல்விகளுடன் உள்ளது. இரண்டாவது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 45 தோல்விகளுடனும், மூன்றாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 38 தோல்விகளுடனும் உள்ளன. நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 34 தோல்விகளுடனும், ஐந்தாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 30 தோல்விகளுடனும் உள்ளன.
ஆர்சிபி – பிபிகேஎஸ் மேட்ச்
இப்போட்டியில் டாஸில் தோல்வியடைந்த RCB அணி முதலில் பேட்டிங் செய்தது. 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 95 ரன்களே எடுத்தது. எளிமையான இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 12.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எட்டி வெற்றி பெற்றது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தோல்வியடைந்த RCB அணியின் டிம் டேவிட் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். அவர் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததுடன், 5 ஃபோர்க்களும் 3 சிக்ஸர்களும் அடித்திருந்தார்.
RCB அணியின் பிரச்சினைகள்
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினாலும் மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது ஆர்சிபி அணி. பேட்டிங் சீராக இல்லை, பவுலிங்கும் எதிர்பார்த்தளவுக்கு இல்லை. ஹோம் கிரவுண்டில் இந்த சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி என மோசமான பார்மை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ஆர்சிபி அணி. IPL 2025 தொடரில் இதுவரை மூன்று ஹோம் போட்டிகளில் தோற்றுள்ளது. இதிலிருந்து ஆர்சிபி சரிசெய்து சிறப்பாக ஆட வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்கின்றனர்.