புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த 27 வயது நபர் ரூ.19 கோடி ரொக்கம், ரூ.4 கோடி தங்கத்துடன் ஜாம்பியா விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான இந்திய இளைஞர் ஒருவர் துபாய்க்கு விமானத்தில் சென்றுள்ளார். இவரது விமானம் ஜாம்பியாவின் லுசாகாவில் உள்ள கென்னத் கவுன்டா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி மீண்டும் புறப்பட தயாரானது.
அப்போது அந்த இளைஞரை இடைமறித்த ஜாம்பியா போதைப்பொருள் தடுப்பு அமலாக்கத்துறை ஆணைய அதிகாரிகள் (டிஇசி) அவரின் உடமைகளை சோதனையிட்டனர் . அதில், அவரது சூட்கேசில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 2.32 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.19.32 கோடி) மதிப்பிலான ரொக்கம், ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அந்த இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உதவியதாகவும். அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் ஜாம்பியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஜாம்பியாவில் தாமிரம், தங்கம் போன்ற உலோகங்களின் வளம் ஏராளமாக உள்ளன. இருப்பினும், அந்த நாட்டின் 60 சதவீத மக்கள் இன்னும் வறுமையில்தான் வாழ்கின்றனர்.
ஜாம்பியாவில் கடத்திவரப்பட்ட தங்கம் பெருமளவில் பிடிபடுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2023-ல் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஐந்துபேர் வந்திறங்கிய விமானத்தை சோதனையிட்டதில் அவர்கள் 127 கிலோ தங்கம் மற்றும் 5.7 மில்லியன் டாலரை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.