சென்னை: ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தகவலை கேள்விப்பட்டவுடன், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக முதற்கட்டமாக அவர்களுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300 (லேன் லைன்), 9289516712 (செல் மற்றும் வாட்ஸ் அப்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வரின் உத்தரவின் பேரில், 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
இதற்காக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையாளர் (Resident Commissioner) அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது.
முதல்வர், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க>> ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி