பயங்கரவாத தாக்குதலில் திருமணமான 6 நாட்களில் கொல்லப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி

புதுடெல்லி: இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால், திருமணமான 6 நாட்களில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானாவின் கர்னல் பகுதியைச் சேர்ந்த இந்திய கடற்படை அதிகாரியான வினய் நர்வால், கொச்சியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 16-ம் தேதிதான் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. 19-ம் தேதிதான் திருமண வரவேற்பு நடந்துள்ளது.

இந்நிலையில், புதுமண தம்பதியர் பஹல்காம் வந்துள்ளனர். பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் அவரும் உயரிழந்துள்ளார். அவரது உடல் புதுடெல்லி கொண்டு வரப்பட்டது. சொந்த ஊருக்கு உடல் அனுப்பிவைக்கப்படுவதற்கு முன்பாக, முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், வினய் நர்வாலின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட வினய் நர்வாலின் மனைவி, தனது கணவரின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி முன்பாக வந்து தனது சோகத்தை மறைத்துக்கொண்டு, “அவரது ஆன்மா சாந்தி அடையும். அவர் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் எங்களை பெருமைப்பட வைத்தார். இந்த பெருமையை ஒவ்வொரு வழியிலும் நாங்கள் கொண்டு செல்வோம்” என ஆவேசமாகப் பேசினார். பின்னர், சவப்பெட்டியை அணைத்துக் கொண்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்.

வினய் நர்வாலின் மறைவுக்கு இந்திய கடற்படை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. “பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த லெப்டினன்ட் வினய் நர்வாலின் துயர இழப்பால் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, மற்றும் இந்திய கடற்படையின் அனைத்து பணியாளர்களும் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளனர். கற்பனை செய்ய முடியாத துயரத்தின் இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று இந்திய கடற்படை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.