நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி முதல் எல்.எஸ்.ஜி வரையில் டாப் 6 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருக்கின்றன.
கடைசி 4 இடங்களில் அணிகளான கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை ஆகியவை ஒவ்வொரு ஆட்டத்தையும் வாழ்வா சாவா என ஆடும் நிலையில் இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு போட்டியாகத்தான், டெல்லியை அதன் சொந்த மைதானத்தில் இன்று (ஏப்ரல் 29) எதிர்கொண்டது கொல்கத்தா.
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல், இந்த சீசனில் பெரும்பாலான கேப்டன்கள் டாஸ் வென்று தேர்வு செய்யும் பந்துவீச்சையே தேர்வு செய்தார்.

டெல்லியைப் பந்தாடிய கொல்கத்தா டாப் ஆர்டர்!
இந்தப் போட்டியில் ஜெயிக்க அதிரடி பேட்டிங் முக்கியம் என நரைனும், குர்பாஸும் களமிறங்கினார். அந்த இன்டென்ட்டை ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தையும் கடைசி பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பி வெளிப்படுத்தினார் குர்பாஸ்.
2-வது ஓவரை சிக்ஸ், ஃபோர் என சுனில் நரைன் அதிரடி காட்ட, 3-வது ஓவரில் முதல் நான்கு பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்த குர்பாஸ், ஸ்டார்க்கின் ஐந்தாவது பந்தில் கேட்ச் அவுட்டனர்.

12 பந்துகளில் 5 பவுண்டரி, ஓரு சிக்ஸ் என 26 ரன்கள் அடித்து கொல்கத்தாவுக்கு நல்ல மொமென்ட்டம் ஏற்படுத்திக் கொடுத்தார் குர்பாஸ்.
அடுத்து வந்த கேப்டன் ரஹானேவும் இந்த நல்ல தொடக்கத்தை சரியாகப் பயன்படுத்தி, நரைனின் கூடுதல் அதிரடியுடன் பவர்பிளேயின் கடைசி மூன்று ஓவர்களில் 31 சேர்க்க, பவர்பிளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் குவித்தது கொல்கத்தா.
மொமென்ட்டமை மிஸ் பண்ணிய கொல்கத்தா… அதையும் மிஸ் பண்ணிய டெல்லி!
கொல்கத்தாவின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த விப்ராஜ் நிகாமிடம் 7-வது ஓவரை அக்சர் ஒப்படைக்க, அதே ஓவரில் நரைனின் விக்கெட் விழுந்தது.
அடுத்த ஓவரிலேயே கேப்டன் ரஹானேவின் விக்கெட்டை அக்சர் வீழ்த்தினார். கொல்கத்தாவின் டாப் ஆர்டர் மட்டும் 42 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தது.
இந்த நேரத்தில், விப்ராஜின் 9-வது ஓவரில் அங்கிரிஷ் ரகுவன்ஷி பேக் டு பேக் சிக்ஸ் அடித்து 9 ஓவர்களிலேயே அணியின் ஸ்கோரை 100-ஐ கடக்க வைத்தார்.

விக்கெட்டுகள் விழுந்தாலும் கொல்கத்தாவின் ரன் வேகம் குறையாத நேரத்தில், 10-வது ஓவரில் வெங்கடேஷ் ஐயரை பெவிலியனுக்கு அனுப்பினார் அக்சர் படேல்.
இந்த சமயத்தில் இணைந்த ரகுவன்ஷி – ரின்கு சிங் கூட்டணி அடுத்த நான்கு ஓவர்களில் விக்கெட் எதுவும் விடாமல் ஓவருக்கு நிதானமாக 25 ரன்கள் சேர்த்தது.
நிதானம் போதும் என வென்குண்டெழுந்த ரின்கு சிங், குல்தீப் வீசிய 15-வது ஓவரில் சிக்ஸும், ஃபோருமாக விளாச, 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது கொல்கத்தா.

அடுத்த ஓவரில் ஒரு நோ பால் வீசியும் பவுண்டரி எதுவும் விட்டுகொடுக்காமல் சிக்கனமாகப் பந்துவீசினார் விப்ராஜ். 17-வது ஓவரை யார்க்கர்களாக வீசிய துஷ்மந்த சமீரா, நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரகுவன்ஷியை 42 ரன்களில் வெளியேற்றினார்.
அதற்கடுத்த ஓவரில் ரின்கு சிங்கை விப்ராஜ் வெளியேற்றினார். 18 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் எடுத்த கொல்கத்தா, ரஸலின் கேமியோ அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.
கடைசி ஓவரில் ஸ்டார்க்கின் பேக் டு பேக் விக்கெட் உட்பட மூன்று விக்கெட் விழுந்தது. பவர்பிளே முடிந்த பின்னர் அடுத்தடுத்து விக்கெட் எடுத்த டெல்லி, அந்த மொமென்ட்டமை சரியாகப் பயன்படுத்தாததால், கொல்கத்தா தடுமாறியபோதும் 200 ரன்களைக் கடந்துவிட்டது.
ஓப்பனிங்கில் தடுமாறிய டெல்லி!
205 ரன்கள் என்ற இழக்க்கை நோக்கிக் களமிறங்கிய அபிஷேக் போரல் – டு பிளெஸ்ஸிஸ் கூட்டணியை இரண்டாவது பந்திலேயே உடைத்தார் அனுகுல் ராய். 2 பந்துகளில் 4 ரன்களில் போரல் வெளியேற, டு பிளெஸ்ஸிஸுடன் கைகோத்தார் கருண் நாயர்.
ஒருபக்கம் பவுண்டரிகளாக டு பிளெஸ்ஸிஸ் விளாசினாலும், வைபவ் அரோரா வீசிய ஐந்தாவது ஓவரில் பவுண்டரி அடித்த அடுத்த பந்திலேயே எல்.பி.டபிள்யு முறையில் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார் கருண் நாயர்.

அடுத்து ராகுல் களமிறங்க, மறுமுனையில் பவுண்டரி அடிக்கும் தன் வேலையை நிதானமாகச் செய்து கொண்டிருந்தார் டு பிளெஸ்ஸிஸ். பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் குவித்தது டெல்லி.
இங்கிருந்து மேட்சை கடைசி வரை கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்புடைய ராகுல், 7-வது ஓவரில் தேவையில்லாமல் சிங்கிள் ஓட முயன்று நரைன் த்ரோவில் ரன் அவுட்டானார்.
ராகுலின் விக்கெட் ஆட்டத்தின் போக்கை கொஞ்சம் கொல்கத்தாவின் பக்கம் நகர்த்தியது.
பொறுப்பாக ஆடிய டு பிளெஸ்ஸிஸ்!
69-3 என்ற நிலையில் இருந்த டெல்லியை, டு பிளெஸ்ஸிஸ் – அக்சர் கூட்டணி மேட்ச் கைவிட்டுப்போகாமல் போக ஆடத் தொடங்கியது.
வருண் சக்ரவர்த்தி வீசிய 9-வது ஓவரில் டு பிளெஸ்ஸிஸ் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க, அதற்கடுத்த ஓவரில் அக்சர் படேலின் சிக்ஸருடன் 10 ஓவர்கள் முடிவில் 97 ரன்களைக் குவித்தது டெல்லி. அடுத்த ஓவரில் முதல் பந்திலேயே டு பிளெஸ்ஸிஸ் சிங்கிள் எடுத்து அரைசதம் கடந்தார்.

அதே ஓவரில் அக்சரின் பவுண்டரியுடன் டெல்லி 100 ரன்களைக் கடந்தது.
அடுத்த ஓவரில் டு பிளெஸ்ஸிஸ் அடித்த பந்தை பிடிக்க முயன்று கையில் அடிபட்ட ரஹானே, வலி தாங்காமல் பெவிலியனுக்குச் செல்லவே, ஆன்-ஃபீல்டு கேப்டனாக நரைன் செயல்படத் தொடங்கினார்.
12, 13 ஓவர்களில் டு பிளெஸ்ஸிஸ் – அக்சர் கூட்டணி அதிரடியாக 22 ரன்கள் சேர்த்தது.
மிஸ்ட்ரி மேன் நரைன் செய்த மேஜிக்!
இந்த நேரத்தில் எப்படியாவது இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க 14-வது ஓவரை வீசவந்தார் நரைன், முதல் பந்தே சிக்ஸ் போனாலும், அடுத்த பந்திலேயே அக்சரை வெளியேற்றியதோடு, அந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்டப்ஸையும் கிளீன் போல்டாக்கி டெல்லியின் வெற்றி வாய்ப்பை கொல்கத்தா பக்கம் இழுத்தார்.
அடுத்த ஓவரில் விப்ராஜின் பவுண்டரியுடன் 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு டெல்லி 146 ரன்கள் குவித்தது. டெல்லியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 59 ரன்கள் தேவை.
62 ரன்களுடன் டு பிளெஸ்ஸிஸ் களத்தில் இருக்கிறார், மேட்ச் நம் கையில்தான் இருக்கிறது என டெல்லி நம்பிக்கொண்டிருந்த வேளையில், 16-வது ஓவரில் உள்ளே வந்து டு பிளெஸ்ஸிஸ் விக்கெட் எடுத்து கிட்டத்தட்ட வெற்றியை கொல்கத்தாவுக்கு உறுதி செய்துவிட்டார் நரைன். இந்த ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே வந்தது.

இருப்பினும், அந்த நேரத்தில் இணைந்த விப்ராஜ் – அஷுதோஷ் கூட்டணி முதல் போட்டியில் லக்னோவுக்கெதிராகச் செய்ததை இப்போட்டியில் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பைக் கூட்டியது.
அதற்கேற்றாற் போலவே, ஹர்ஷித் ராணா வீசிய 17-வது ஓவரில் லாங் ஆஃப் திசையில் அஷுதோஷ் ஒற்றைக் கையில் சிக்ஸ் அடிக்க டெல்லிக்கு நம்பிக்கை கூடியது. அடுத்த மூன்று ஓவர்களில் டெல்லியின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது.
ஆன்-ஃபீல்டு கேப்டனாக நரைன் போட்ட மாஸ்டர் பிளான்!
இந்த இடத்தில்தான் வைபவ் அரோராவுக்கு 2 ஓவர்கள் இருந்தபோதும், 18-வது ஓவரில் மாஸ்டர் பிளானாக வருண் சக்ரவத்தியைக் கொண்டு வந்தார் நரைன்.
அந்த இரண்டாவது பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த அஷுதோஷ் வருண் வலையில் சிக்கி கேட்ச் அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே ஸ்டார்க்கும் அவுட்.
நரைன் பிளான் கச்சிதமாகக் கைகொடுக்க அந்த இடத்திலேயே கொல்கத்தாவின் வெற்றி பெற்றுவிட்டது.

அந்த ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த விப்ராஜ், அடுத்தடுத்த ஓவரில் பவுண்டரி, சிக்ஸ் என அடித்து பரபரப்பை மட்டுமே கூட முடிந்தது.
ரஸல் வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்த விப்ராஜ் க்ளீன் போல்ட் ஆக, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை மட்டுமே டெல்லியால் குவிக்க முடிந்தது.

14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது. பேட்டிங்கில் 16 பந்துகளில் 27 ரன்கள் அடித்தது, ஃபீல்டிங்கில் ராகுலை ரன் அவுட்டாகியது, பவுலிங்கில் அக்சர், ஸ்டப்ஸ், டு பிளெஸ்ஸிஸ் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது, கேப்டன்சியில் மாஸ்டர் பிளானாக 18-வது ஓவரை வருணிடம் கொடுத்து அஷுதோஷை விக்கெட் எடுத்தது என ஆல்ரவுண்ட் பெர்ஃபாமென்ஸாகக் கலக்கிய நரைன் ஆட்ட நாயகன் விருது வென்றார்.