இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையிலே பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், அயோத்தி பாபர் மசூதி குறித்து பாகிஸ்தான் நாட்டின் மேலவை உறுப்பினர் பல்வாஷா முகமது ஜாய் கானின் கருத்து கவனம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஆவேசமாக அவர் தெரிவித்த கருத்து வைரலாகி உளள்து. “அயோத்தியில் புதிதாக கட்டப்படும் பாபர் மசூதிக்கான முதல் செங்கல்லை நம் நாட்டு ராணுவ வீரர்கள் நாட்டுவார்கள். முதல் அஸானை (பிரார்த்தனை) பாகிஸ்தான் ராணுவ தலைவர் வழங்குவார்.
மேலும், சீக்கிய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானை தாக்க மாட்டார்கள். ஏனெனில், பாகிஸ்தான் குறு நானாக்கின் மண். இந்தியா அச்சுறுத்தினாலும் சீக்கியர்கள் தக்க மாட்டார்கள்” என அவர் கூறியுள்ளார்.
“சிந்து நதி எங்களுடையது… அது எங்களுடையதாகவே இருக்கும். ஒன்று எங்கள் தண்ணீர் அதில் பாயும், அல்லது இந்தியர்களின் ரத்தம் பாயும்” என முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அண்மையில் சொல்லி இருந்தார். இதேபோல இந்தியா மீது அணு ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்துவோம் என அந்த நாட்டின் அமைச்சர் அப்பாஸி கூறியிருந்தார்.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு உளவுத் துறை இருப்பது தெரியவந்துள்ளது. இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது.
உ.பி.யில் அயோத்தி ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்கில் 2019, நவம்பர் 19-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், பாபர் மசூதிக்கு பதிலாக புதிய மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் மாநில அரசால் உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ராமஜென்ம பூமி வளாகத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள தனிப்பூர் கிராமத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது.