சென்னை: சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னையில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: “மின்சார வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப அவற்றுக்கான பொது சார்ஜிங் நிலையங்கள் மிகவும் குறைவாக உள்ளன. மேலும், மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கி.மீ. தூரத்துக்கும் ஒரு சார்ஜிங் நிலையங்களும் நகர்ப்புறங்களில் 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு நிலையமும் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னையில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவையைப் பொறுத்து நகராட்சிகள், பஞ்சாயத்துக்களில் 5 முதல் 10 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சார்ஜிங் நிலையங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
தனியார் நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் சார்ஜிங் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும். குறிப்பாக, சார்ஜிங் நிலையங்களை அமைக்க தேவையான நிலம் கண்டறிதல், மின்இணைப்பு வழங்குதல் ஆகிய உதவிகள் அளிக்கப்படும். இவை தவிர, ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மற்றும் வர்த்தக இடங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்துள்ளனர்.
தற்போது, சென்னை, காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 472 பொது சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.