புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதால், அட்டாரி – வாகா எல்லை வழியாக 786 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுக்கு பதலடி கொடுக்க முடிவெடுத்துள்ள மத்திய அரசு, இவ்விஷயத்தில் ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை வழங்கி உள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் ராணுவம் தனது பதிலடி நடவடிக்கையை தொடங்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியா அடுத்த 24-36 மணி நேரத்தில் ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக “நம்பகமான உளவுத்துறை” தகவல்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்களுக்குள் 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பாகிஸ்தானிலிருந்து அட்டாரி-வாகா எல்லை வழியாக மொத்தம் 1376 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும் அவர், “பாகிஸ்தானுக்கு நேரடி விமானம் இல்லாததால், துபாய் அல்லது பிற வழித்தடங்கள் வழியாக பலர் விமானம் மூலம் வெளியேறியுள்ளனர். மாநில காவல்துறை மற்றும் பிற மத்திய நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டினரை அடையாளம் கண்டு வருவதால், அதிகமான பாகிஸ்தான் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு உள்ளீடுகளை வழங்கும் ஆலோசனை அமைப்பான தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தை (NSAB) மத்திய அரசு புதுப்பித்துள்ளது. முன்னாள் R&AW தலைவர் அலோக் ஜோஷி, NSAB தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் விவகாரம்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்ற காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று (ஏப்ரல் 30, 2025) பரிசீலிக்கும் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டத்தொடரைக் கூட்டுவது குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவெடுத்தவுடன் அதன் முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.