லண்டன்: பஹல்காம் தீவிரவாதிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும் என்றும், அதே நேரத்தில் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கவும் இங்கிலாந்து உதவும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹமீஸ் ஃபல்கனர் பேசியதாவது:
பஹல்காம் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு, இங்கிலாந்தின் முழு ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க உதவவும் இங்கிலாந்து முக்கிய பங்காற்றும். இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் இங்கிலாந்து தெருக்களில் எதிரொலிக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கவலையளிக்கிறது. தாக்குதல் நடத்திய காஷ்மீரைச் சேர்ந்த அங்கீத் லவ்(41) மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் கடந்த திங்கட் கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்தியாவில் மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி பாகிஸ்தானை இங்கிலாந்து கேட்டுக்கொள்கிறது. இரு நாடுகளும் பாதுகாப்பாக இருக்க இங்கிலாந்து தனது ஆதரவை அளிக்கும். இவ்வாறு ஹமீஸ் ஃபல்கனர் கூறினார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதற்கு பல எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியதையும், பாகிஸ்தானுக்கு எதிராக நிருபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் கூறுவதையும், புல்டோசர் மூலம் தீவிரவாதிகளின் வீடுகளை இடித்ததையும் சில எம்.பி.க்கள் விமர்சித்தனர்.
லேபர் கட்சி எம்.பி. பேரி கார்டினர் பேசுகையில், ‘‘தீவிரவாத பயிற்சி முகாம்களை மூடினால்தான் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்க முடியும் என நாம் நிபந்தனை விதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.