சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்காக தூவப்பட்ட பிளீச்சிங் பவுடர் தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடம் அருகில், அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபுவுக்கு பதிலாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மேயர் பிரியாவிடம், “இது கறி அறுக்கும் இடம். அதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இன்று நடக்கும் அன்னதான நிகழ்ச்சியில் பலரும் சாப்பிடுகின்றனர். ஆனால், ஒரு இடத்தில்கூட பிளீச்சிங் பவுடரே தூவவில்லை.
இதுகுறித்து நானும் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியும் யாரும் கண்டுகொள்வதில்லை. இன்று இந்த பகுதியில் தூவப்பட்ட பிளீச்சிங் பவுடர் இதுதான். இதில் ஏதாவது வாசனை வருகிறதா என்று மட்டும் பாருங்கள், குறைந்தபட்ச வாசனைக்கூட வரவில்லை பாருங்கள்?” என்று அந்தப் பவுடரை மேயரிடம் கொடுத்தார். அதனை பரிசோதித்துப் பார்த்த மேயர் பிரியா, “வாசனை வருகிறது” என்றார். அதற்கு அந்த நபர், “வாசனையே வரவில்லை” என்றார்.
தொடர்ந்து அவர், “இந்தப் பகுதிக்கு வந்து பாருங்கள்” என்று கூற, மேயர் பிரியா, அந்த நபரிடம் “நீங்கள் ஊடகத்துக்குப் பேட்டி கொடுக்கிறீர்களா, இல்லை பொதுவாக பேசுகிறீர்களா,” என்றார், அதற்கு அந்த நபர், “உங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருகிறேன்,” என்றார். அதற்கு மேயர் பிரியா “அப்போது கேமராவை ஆஃப் செய்யுங்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து அந்த நபர், “இந்த பவுடர்தான் இங்கு முழுவதும் தூவப்படுகிறது. இது உங்களுடைய கவனத்துக்கு வந்ததா இல்லையா என்று தெரியவில்லை,” என்றார். அப்போது மேயர் பிரியா, “இங்கு இறைச்சி வெட்டும் கூடம் இருப்பது அனைவருக்கும் தெரியும். மாநகராட்சிக்கும் தெரியும். அந்தக் கூடத்தை நவீனப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முழுக்க அடைக்கப்பட்ட கட்டுமானத்துடன் இறைச்சிக் கூடம் மாற்றம் செய்யப்படவுள்ளது” என்றார்.
அப்போது அந்த நபர், “பிளீச்சிங் பவுடர் தூவியிருந்தால் கொஞ்சமாவது துர்நாற்றம் குறைந்திருக்கும்,” என்றார். அதற்கு மேயர் பிரியா “இது என்ன பவுடர்” என்று கேட்க, அந்த நபர், “இது என்னவென்றே தெரியவில்லை” என்றார். அதற்கு மேயர் பிரியா, “என்னவென்று தெரியாத பவுடரை தூவிச் செல்வார்களா என்ன, இது என்ன பான்ட்ஸ் பவுடரா?” என்று கூறிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டச் செல்ல முயன்றார்.
அதற்கு அந்த நபர், “இது சரியான பதிலே இல்லை மேடம். நீங்கள் வேண்டும் என்றால் இந்த பவுடரை ஆய்வுக்கு கொண்டு செல்லுங்கள். இது பிளீச்சிங் பவுடராக இருந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்,” என்றார். தொடர்ந்து, மேயர் பிரியாவிடம், பிளீச்சிங் பவுடரின் தரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “இது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.