தஞ்சாவூர்: அதிமுக -பாஜக கூட்டணி வாக்குகளை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்கிறது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் வராஹி அம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற சத்ரு சம்ஹார யாகத்தில் கலந்துகொண்ட அர்ஜுன் சம்பத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதம் அழியவும், நமது நாட்டின் ராணுவம் வலிமை பெறவும், யுத்தத்தில் வெற்றி பெறவும் தெய்வ பலம் எப்போதும் அவசியம் என்பதால், சத்ரு சம்ஹார யாகம் நடத்தி உள்ளோம்.
தமிழகத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்களுக்கு நிதி இல்லை என்கிறார்கள். ஆனால், கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம், சிலை, மணிமண்டபம் என்றால் உடனே நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தை சார்ந்தவர்கள், வரவேற்பு என்ற பெயரில் கோவை மற்றும் மதுரையில் பொது சொத்தை சேதப்படுத்தி, மக்களுக்கு தொந்தரவு செய்துள்ளனர்.
அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். இந்தக் கூட்டணி 2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். இந்த வெற்றியை சிதைக்க வேண்டும் என்பதற்காக, விஜய்க்கு நிதியுதவி, அனுமதி, ஆதரவுகளை அளித்து வருகின்றனர். அதிமுக, பாஜக வாக்குகளைப் பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்கிறது. திமுகவின் ‘ஏ’ டீம்-ஆக விஜய் உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.