உத்தராகண்டில் கேதார்நாத் கோயிலில் நடை திறப்பு

டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதை அடுத்து புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் நேற்று பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. உத்தராகண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர். இது சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

இமயமலையில் அமைந்துள்ள இக்கோயில்கள் கோடையில் 6 மாதங்கள் மட்டும் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும். இந்நிலையில் உத்தராண்டில் வருடாந்திர சார்தாம் யாத்திரை கடந்த புதன்கிழமை தொடங்கியது. அன்று கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்கள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் 3-வது கோயிலாக கேதார்நாத் கோயில் நேற்று காலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. இமயமலையில் சுமார் 11,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். மேலும் 11-வது ஜோதிர்லிங்க தலமாகும்.

நடை திறக்கும் விழாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது மனைவி கீதாவுடன் பங்கேற்றார். கோயில் கதவுகள் திறக்கப்பட்ட பிறகு, மக்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக அவர் முதலில் பூஜை செய்தார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இக்கோயில் 10.8 டன் எடை கொண்ட 54 ரக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேபாளம், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தும் பல்வேறு ரக மலர்கள் இக்கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன.

கேதார்நாத் கோயிலில் இந்த ஆண்டு புதிய ஏற்பாடாக வாராணசி, ஹரித்வார், ரிஷிகேஷில் செய்யப்படுவது போல் மகா ஆரத்தி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மந்தாகினி, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் செய்யப்பட்டுள்ளன. பத்ரிநாத் கோயில் நாளை (மே 4) திறக்கப்பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.