மும்பை,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில், சி.எஸ்.கே. மெகா ஏலத்தில் தவறு செய்தது போல ராஜஸ்தானும் தவறு செய்ததே அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, சி.எஸ்.கே அணி ஏலத்தில் தவறு செய்து விட்டதாக மைக் ஹசி ஒப்புக்கொண்டதை நாம் பார்த்தோம். அதனால் அவர்கள் வெளியே சென்று விட்டனர். அதே போல ஏலத்தில் பட்லர் விஷயத்தில் என்ன நடந்தது என்பதில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த யாராவது ஒருவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ராஜஸ்தான் தவறு செய்துள்ளது. அதனாலேயே அவர்கள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவரை வெளியிட்டதற்காக ராஜஸ்தான் அணி தங்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது தொடரை மாற்றி அமைக்கும் மிகப்பெரிய தவறாக அமைந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.