புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் தோற்றத்தில் இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்புக்கான அனுமதி பெறவில்லை என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் பட்டி காவல் நிலையப் பகுதியில் போலீஸார் ஒரு தனித்துவமான காரை பறிமுதல் செய்துள்ளனர். இது, ஜோன்பூர் மாவட்டம் மஹராஜ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள லோஹிந்தாவைச் சேர்ந்த ராஜ் நாராயண் என்பவருக்கு சொந்தமானது. இவர் தனது காரை ஹெலிகாப்டர் போன்ற தோற்றத்தில் மாற்றியமைத்துள்ளார். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்த இந்த கார், திருமணங்களில் மணமகனுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்துள்ளது.
பட்டி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் குமார் தீட்சித் பத்வா பிரதாப்கரின் கடைவீதி பஜாரில் ரோந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்துகொண்டிருந்த இந்த ஹெலிகாப்டர் வடிவிலான கார், அவரது கண்களில் தென்பட்டுள்ளது. இந்த காரை ரோஹிடாவைச் சேர்ந்த தினேஷ் குமார் படேல் என்ற ஓட்டுநர் ஒட்டி வந்தார். முதலில் ஹெலிகாப்டர் காரை பார்த்து வியந்துள்ளார், உதவி ஆய்வாளரான குமார் தீட்சித். இதன் பிறகு அவர் உடனடியாக காரை நிறுத்தி விசாரித்துள்ளார்.
பின்னர் அவர் காரை காவல் நிலையத்திற்கு கொண்டு வரக் கூறிவிட்டு, அதைப் பறிமுதல் செய்தார். மேலும், காருக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இது குறித்து உதவி ஆய்வாளர் குமார் தீட்சித் கூறுகையில், ’இதுபோன்ற மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். முன்னதாக, வெவ்வேறு வகையான ஒலியை உருவாக்கும் சைலன்சர்களைக் கொண்ட 18 முதல் 20 புல்லட் பைக்குகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’எனத் தெரிவித்தார்.
இந்த கார் மீது, மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 207-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. போலீஸார் காரை நிறுத்தியபோது, காரைப் பார்க்க ஒரு பெரும் கூட்டம் கூடியது.ஏனெனில், காரின் பின்பகுதியில் ஹெலிகாப்டரைப் போன்ற நீண்ட வால்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹெலிகாப்டரின் தலை மீது அமைந்துள்ள காத்தாடியும் இந்த காரில் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டர் காரால், பிரதாப்கர் நகரக் காவல் நிலையம் ஒரு சுற்றுலா பகுதியாக மாறிவிட்டது. கொளுத்தும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் பிரதாப்கரை சுற்றியுள்ள கிராமத்தினரும் ஹெலிகாப்டரைக் காரைக் காண காவல் நிலையத்திற்கு கூடத் துவங்கிவிட்டனர்.