IPL 2025: Will Rain Cancel RCB vs CSK Match? : ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த பிளாக்பஸ்டர் போட்டிக்கு முன், வானிலை குறித்த ஒரு பெரிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, பெங்களூருவில் சனிக்கிழமை பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம் என கனவுடன் இருந்த அணிக்கு இப்போது மழை சிக்கலாக மாறியுள்ளது. ஐபிஎல் 2025ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) இதுவரை 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளைப் பெற்று ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மழை காரணமாக RCB vs CSK போட்டி ரத்து செய்யப்படுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை தோற்கடிப்பதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி IPL 2025 தொடரில் முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெறும். இருப்பினும், இந்தப் போட்டியின் மீது மழை மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. சனிக்கிழமை மழை பெய்ய 70% வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மே 3 ஆம் தேதி இன்று மதியம் அல்லது மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை நிலவரம் கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பயிற்சி செய்ய சென்றபோது மழை குறுக்கிட்டது. மழை நின்ற பிறகு மாலை 4:30 மணிக்கு சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியை மீண்டும் தொடங்கினர்.
பெங்களூரு வானிலை லேட்டஸ்ட் அப்டேட்
வெள்ளிக்கிழமை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி மாலை 5 மணிக்கு பயிற்சியை தொடங்கியது. இதில் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் சுமார் ஒரு மணி நேரம் பேட்டிங் செய்தனர், ஆனால் கனமழை காரணமாக தங்களின் பயிற்சியை முன்கூட்டியே ரத்து செய்து கிளம்பினர். நேற்று மாலையில் பெங்களூரு நகரில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. நடப்பு சீசனில் 7 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இந்தப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
RCB அணிக்கு நல்ல வாய்ப்பு
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக அந்த அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும். அத்துடன் டாப் 2 இடத்தை உறுதி செய்வதற்கான வாய்ப்பும் பிரகாசமாகும். அதுவே மழை குறுக்கிட்டால் ஆர்சிபி அணியின் இந்த கனவுக்கு பெரும் சிக்கல் உருவாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே வெளியேறிவிட்டது. அதனால் அந்த அணி இப்போட்டியை ஒரு சம்பிராதயத்துக்கு மட்டுமே விளையாடுகிறது.