ஐபிஎல் 2025 தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மறைக்க வேண்டிய ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. இந்த சீசனில் வெறும் இரண்டு வெற்றிகளை மட்டுமே இதுவரை பெற்றுள்ளனர். மேலும் பிளே ஆப் ரேஸில் இருந்தும் வெளியேறி உள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு தொடருக்கான ஏற்பாடுகளை இப்போது இருந்தே செய்ய வேண்டி சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு சிறப்பாக விளையாடாத சில வீரர்களை அணியில் இருந்து நீக்க சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 மினி ஏலத்திற்கு முன்பாக பின்வரும் ஐந்து வீரர்களை சென்னை அணி நீக்கலாம்.
மேலும் படிங்க: கிரிக்கெட்டில் இத்தனை வகையான டக்-அவுட்டா? முழு பட்டியல் இதோ!
விஜய் சங்கர்
2025 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 1.20 கோடிக்கு வாங்கப்பட்டார் விஜய் சங்கர். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவுமே செய்யவில்லை. ஒரு அரை சதம் அடித்திருந்தாலும் அந்த போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவியது. இதனால் விஜய் சங்கர் அணியில் இருந்து நீக்கப்படலாம்.
டேவான் கான்வே
கடந்த சில சீசன்களாக சென்னை அணிக்கு துவக்க வீரராக இருந்து வருகிறார் டேவான் கான்வே. 2023ல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இருப்பிடம் இந்த சீசனில் அவரை ஏலத்தில் எடுத்தது சென்னை. ஆனால் அவர் சரியான ஃபார்மல் இல்லாததால் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். இவரையும் சென்னை அணி கழட்டி விடலாம்.
ராகுல் திருப்பாதி
ராகுல் திருப்பாதி இந்த ஆண்டு ஏலத்தில் கிட்டத்தட்ட 3.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். தொடர்ந்து பல வாய்ப்புகள் கொடுத்தபோதிலும் அவர் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறா.ர் எனவே நிச்சயம் இவரை சென்னை அணி தக்க வைக்காது.
தீபக் ஹூடா
ராகுல் திருப்பாதி போலவே தீபக் ஹூடாவிற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக வாய்ப்பு கொடுத்துள்ளது. ஆனாலும் 5 போட்டிகளில் விளையாடி வெறும் 31 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 1.70 கோடிக்கு இவரை ஏலத்தில் எடுத்தும் எந்தவித உபயோகமும் இல்லை.
ரவிச்சந்திரன் அஸ்வின்
கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஸ்வினை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் அவரால் சென்னை மைதானத்திலேயே விக்கெட்களை எடுக்க முடியவில்லை. இதனால் கடந்த சில போட்டிகளில் அவருக்கு பிளேயிங் லெவனிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே அஸ்வினை ஏலத்தில் விட்டு சிறிய தொகைக்கு மீண்டும் எடுக்கலாம்.
மேலும் படிங்க: மும்பை ரசிகர்களுக்கு ஷாக்.. அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!