சாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசின் முடிவு மாறியதன் பின்னணி என்ன?

புதுடெல்லி: பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின், பாஜகவுக்கு ஓபிசி எனும் இதர பிற்படுத்தப்பட்டவர் வாக்குகள் அதிகரித்துள்ளது. இதுவே, சாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசு தன் முடிவை மாற்றியதன் முக்கியப் பின்னணியாகக் கருதப்படுகிறது.

ஒரு காலத்தில் உயர் சாதியினர் மட்டுமே பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியாகக் கருதப்பட்டனர். பாஜக என்றவுடன், பலரது மனதில் தோன்றிய முதல் எண்ணம் அது ஒரு உயர் சாதியினர் கட்சி என்பதுதான்.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, பாஜகவின் முக்கிய வாக்காளர்கள் உயர் சாதியினர் மட்டுமே என்ற கருத்து இருந்தது. நரேந்திர மோடி பிரதமரான பிறகு, பாஜகவின் பிற்படுத்தப்பட்ட ஓபிசி வாக்கு வங்கி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதனால், பாஜகவும் பிற்படுத்தப்பட்ட ஓபிசி சமூகத்தினரின் வாக்குகளைப் பெறும் கட்சியாகிவிட்டது.

இதன் காரணமாகத்தான் பாஜக வட மாநிலங்களில் தொடர்ந்து தம் ஆட்சிகளைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஓபிசி வாக்கு வங்கி, பாஜகவின் கணக்கில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூறுகையில், “இதற்கு மிகப்பெரிய காரணம், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, ஓபிசியினருக்காக அவர் நிறைய உழைத்துள்ளதே. ஓபிசியின் சிறிய பிரச்சினையிலும் பிரதமர் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். ஓபிசியினருக்கான வளர்ச்சித் திட்டங்கள் முதல் அவர்களின் நலன்கள் வரை, பிரதமர் மோடியின் கவனம் எல்லாவற்றிலும் உள்ளது.

ஓபிசி வகுப்பினர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரக்கூடாது என்பதற்காகவே, 2014 ஆம் ஆண்டில் பிரதமரான பிறகு, தானும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை அவர் வெளிப்படையாக அறிவித்தார். தேர்தல் சமயங்களில் ஓபிசி மீது முக்கிய கவனம் வைக்கவும் அறிவுறுத்தி வருகிறார். பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.” என்றனர்.

பாஜகவின் ஓபிசி வாக்கு வங்கி அதிகரிப்பதற்கு மற்றொரு பெரிய காரணமும் உள்ளது. அது, அக்கட்சியின் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் உள்ளது. 2014 ஆண்டுக்கு பின்னர் மக்களவைத் தேர்தல்களில் பாஜக அதிகபட்சமாக ஓபிசியினரையே வேட்பாளர்களாக்கி உள்ளது. இதன் காரணமாக, அவர்கள் தம் ஓபிசியினர் வாக்குகளையும் பெற்று எம்.பி.க்களாக வெற்றி பெற்றுள்ளனர். ஓபிசி ஆதரவு பாஜகவுக்கு பெருகியதன் முக்கிய உதாரணம் பிஹார் ஆகும். இங்கு ஓபிசியின் எண்ணிக்கை மிக அதிகமாக 63% உள்ளது. இவற்றின் அதிகபட்ச வாக்குகளை பாஜக பெறத் தொடங்கி உள்ளது.

கடைசியாக பிஹாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலும் அதன் முக்கியக் கூட்டணியான ஐக்கிய ஜனதா தளத்தை விட அதிக தொகுதிகளை பாஜக பெற்றமைக்கு ஓபிசி வாக்குகளே காரணமாயின.

பாஜகவின் ஆரம்பகட்ட அரசியலில் பாரதிய ஜன சங்கம், 1971-ல் 7 சதவீதம் மட்டுமே பெற்றதாக ஒரு புள்ளிவிவரம் உள்ளது. இந்த எண்ணிக்கை, 1996-ல் 19 சதவீதமாக அதிகரித்தது. பிரதமராக மோடி பதவி ஏற்றபின், 2019 ஆம் ஆண்டில், இது இரு மடங்காகி 44 சதவீதத்தை எட்டியது.

இதற்கு நேர்மாறான நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டு வருவதாக அப்புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. அதேசமயம், காங்கிரஸ் இடம்பெற்ற இண்டியா கூட்டணியின் இதர கட்சிகளில் ஓபிசி எண்ணிக்கை உயர்கிறது.

மக்களவை தேர்தல் முடிவுகளில் கடந்த 2019 உடன் ஒப்பிடும்போது, 2024-ல் பாஜகவின் ஓபிசி எம்.பி.க்களும் அதிகரித்துள்ளனர். 2019-ல் 22.8 சதவீதமாக இருந்த ஓபிசி எம்பி.க்கள் 2024-ல் 25.4 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியில் பார்க்கும்போது, 26.2 சதவீத ஓபிசி எம்.பிக்கள் உள்ளனர். இதைவிட அதிகமாக, இண்டியா கூட்டணியில் 30.7 சதவீத ஓபிசி எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

இனி சாதிவாரி கணகெடுப்பின் அறிவிப்பால் பாஜகவுக்கு ஓபிசி ஆதரவு மேலும் கூடும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே சாதிவாரி கணக்கெடுப்பில் தன் முடிவை மத்திய அரசு மாற்றிக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.