பத்மஸ்ரீ பாபா சிவானந்த் காலமானார்: பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி இரங்கல் 

புதுடெல்லி: பத்மஸ்ரீ விருது பெற்ற ஆன்மிக குரு பாபா சிவானந்த் உடல்நலக் குறைவால் வாரணாசியில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாபா சிவானந்துக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், வாராணாசியிலுள்ள பனராஸ் இந்து பல்கலைகழகத்தின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (சனிக்கிழமை) இரவு அவர் காலமானார். மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல், வாராணாசியின் கபீர்நகர் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை நடைபெறும் என்று சீடர்கள் தெரிவித்தனர். சிவானந்துக்கு வயது 128 என அவரது சீடர்களால் கூறப்படுகிறது. பாபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பிரதமர் பகிர்ந்த பதிவில், “சிவானந்த் பாபாஜியின் மறைவு குறித்து கேள்விப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது வாழ்க்கை நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். யோகா மூலம் சமூகத்துக்கு சேவை செய்ததற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. சிவானந்த் பாபா சிவலோகத்துக்கு புறப்பட்டது காசிவாசிகளான நமக்கும், அவரிடமிருந்து உத்வேகம் பெறும் லட்சக்கணக்கான மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த துயர நேரத்தில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

யோகி ஆதித்யநாத் இரங்கல்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், யோகா குருவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர், ‘யோகா துறையில் ஈடு இணையற்ற பங்களிப்பைச் செய்த காசியின் பிரபல யோகா குரு ‘பத்ம ஸ்ரீ’ சுவாமி சிவானந்த் ஜி காலமானார் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அவருக்கு பணிவான அஞ்சலி! உங்கள் சாதனா மற்றும் யோகா நிறைந்த வாழ்க்கை முழு சமூகத்திற்கும் ஒரு சிறந்த உத்வேகமாகும். நீங்கள் உங்கள் முழு வாழ்க்கையையும் யோகாவின் விரிவாக்கத்திற்காக அர்ப்பணித்தீர்கள். உங்கள் மறைவால் ஏற்பட்ட துக்கத்தைத் தாங்கும் வலிமையை வழங்க பாபா விஸ்வநாத்திடம் நான் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த சிவானந்த் பாபாஜி? அண்டைநாடான வங்கதேசத்தின் தற்போதைய சில்ஹெட் மாவட்டத்தில் ஆகஸ்ட் 8, 1896 அன்று பாபா சிவானந்த் பிறந்தார். தனது 6-வது வயதில் தன் பெற்றோரை பட்டினியால் இழந்ததாக அவர் கூறியுள்ளார். அப்போதிருந்தே அவர் ஒரு துறவிபோல் வாழத் தொடங்கியுள்ளார்.

தனது பெற்றோரின் மறைவுக்குப் பிறகு, பாபா சிவானந்த், ஓம்கர்நந்த் என்பவரது பராமரிப்பில் இந்தியாவுக்கு அழைத்துச் வரப்பட்டார், பாபா சிவானந்திற்கு ஒரு பாதுகாவலராகவும் வழிகாட்டியாகவும் ஓம்கர்நந்த், ஆனார். அவரது வழிகாட்டுதலின் கீழ்தான் பாபா சிவானந்த் ஆன்மிகக் கல்வி மற்றும் வாழ்க்கை போதனைகளைப் பெற்றார்.

அவர் தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, யோகா பயிற்சி செய்து, தனது அனைத்து வேலைகளையும் தானே செய்வார். அவர் வேகவைத்த உணவை மட்டுமே சாப்பிட்டுவிட்டு, தரையில் ஒரு பாயில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று அவரது சீடர்கள் கூறினர்.

பத்மஸ்ரீ விருது: யோகா மற்றும் ஆன்மிகத்துக்கு பாபா சிவானந்த் செய்த பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டு, 2022-ல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். அவரது சீடர்கள் அவரது நீண்ட ஆயுளையும் வலுவான ஆரோக்கியத்தையும் அவரது ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டு எனக் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.