சிங்கப்பூர் என்ற சிறிய நாடு உலக வரைபடத்தில் தனக்கென ஒரு வலிமையான இடத்தை உருவாக்கியுள்ளது. அந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது People’s Action Party (PAP) என்ற ஒரு கட்சியின் நீடித்த, நிலையான ஆட்சி. 1959 முதல் 2025 வரை, PAP ஒரு முறையும் தோல்வியறியாமல் 15 முறையும் பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கிறது. தற்போது நடந்த தேர்தலிலும் கூட 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களை வென்று சாதனைப் புரிந்திருக்கிறது.

People’s Action Party (PAP)
PAP (People’s Action Party) கட்சி 1954 ஜூன் 21 அன்று சிங்கப்பூரில் நிறுவப்பட்டது. லீ குவான் யூ (Lee Kuan Yew), டி.கே. ராஜரத்னம், கோ செங் ஸ்வீ, சிதம்பரம் சித்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களால் ‘கம்யூனிச எதிர்ப்பு மற்றும் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு’ என்ற இயக்கமாகத் தொடங்கப்பட்டது.
1959-ம் ஆண்டு சிங்கப்பூர் பூரண சுயாட்சி பெற்றதும், முதலாவது சட்டமன்றத் தேர்தலில் PAP கட்சி களமிறங்கியது. அப்போதே 51 இடங்களில் 43 இடங்களில் வென்று, லீ குவான் யூ முதலமைச்சராகப் பதவியேற்றார்.
PAP கட்சியின் கொள்கைகள்:
சுமார் 66 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியை ஒரு கட்சி கைப்பற்றுகிறது என்றால், அதன் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்றால், அந்தக் கட்சியின் அடிப்படைக் கொள்கையும், அதை அது செயல்படுத்தும் விதமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மக்கள் கண் முன்னாள் பார்க்கும் நாட்டின் வளர்ச்சியுமே அதற்கு காரணம். அப்படி என்ன கொள்கைகளை அந்தக் கட்சி செயல்படுத்துகிறது என்ற தேடலில்…

-
அழுக்கற்ற, ஊழலற்ற, வெளிப்படையான அரசு நிர்வாகம் (Clean Governance)
-
மத்திய திட்டமிடல் பொருளாதாரம் (Centrally Planned Economy)
-
சமூக ஒற்றுமை மற்றும் இன அமைதி (Social Cohesion & Racial Harmony)
-
அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி (Technological Innovation)
-
வெளிநாட்டு முதலீடு மற்றும் நிதி வளர்ச்சி (Global Investment & Finance)
ஆகியவைதான் அந்தக் கட்சியின் அடிப்படை கொள்கைகள். இதை மிகச் சரியாக செயல்படுத்துவதாலேயே அந்தக் கட்சி பெரும் வெற்றிகளைப் படைத்து உலகளவில் வளர்ச்சி மிக்க நாடாக வளர்ந்து நிற்கிறது.

மலேசியா – இணைதலும் பிரிதலும்!
சிங்கப்பூர் 1963-ல் மலேசியாவுடன் இணைந்தது. அப்போது முதல் மலேசியா முழுவதும் கட்சி PAP கட்சியின் விரிவாக்கம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், இது மலேசிய அரசியல் கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை. இதனால் சிங்கப்பூர் – மலேசியா உறவுகளில் ஏற்பட்ட விரிசலால் 1965-ம் ஆண்டு மலேசியாவிடமிருந்து விலகியது சிங்கப்பூர்.
1965 ஆகஸ்ட் 9 அன்று, சிங்கப்பூர் ஒரு தனி நாடாக தன்னை அறிவித்துக்கொண்டது. முதல்வராக இருந்த லீ குவான் யூ பிரதமராகப் பதவியைத் தொடர்ந்தார். அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து 15-வது முறையாக 66 ஆண்டுகள் PAP கட்சி மட்டுமே ஆட்சியைக் கைப்பற்றி வருகிறது.
Generation (G)
PAP கட்சியைப் பொறுத்தவரை அரசியலில் ஒவ்வொரு தலைமுறை தலைவரும், அடுத்தத் தலைமுறைத தலைவரை தேர்வு செய்யும் குழு ஒன்று செயல்படுகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். 1G (First Generation) லீ குவான் யூ தலைமையில் சிங்கப்பூரை உருவாக்கிய ஆரம்ப தலைமுறை தொடங்கி, இந்தத் தேர்தலை சந்தித்தது 4G தலைமுறை.
இந்த Generation குழுவில் புதிய தலைமுறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை வடிவமைக்கும் பொறுப்பு வழங்கப்படும். தற்போதைய 4G குழுவின் தலைவராக லாரன்ஸ் வாங்க் (Lawrence Wong) செயல்படுகிறார்.

லாரன்ஸ் வாங்க் (Lawrence Wong)
2024-ம் ஆண்டு மே மாதம் லீ ஹ்சியன் லூங் பதவியிலிருந்து விலகிய பிறகு நான்காவது பிரதமராக, 4G குழுவின் தலைவராக லாரன்ஸ் வாங்க் பதவியேற்றார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 87 இடங்களை வென்று சாதனை படைத்த சம்பவத்தை நிகழ்த்தியவரும் இவர் தலைமையிலான குழுவே.
ஆரம்ப வாழ்க்கை:
1972-ம் ஆண்டு டிசம்பர் 18 அன்று சிங்கப்பூரில் பிறந்தார் லாரன்ஸ் வாங்க். அவரது தந்தை விற்பனைத் துறையிலும், அவரின் தாய் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றினார்கள். பொதுத் தங்குமிடத்தில் வளர்ந்த இவருக்கு கல்வியின் மீது தீராக் காதல் இருந்தது. அமெரிக்காவில் உள்ள University of Wisconsin-Madison-ல் பொருளாதாரத்திலும், Harvard Kennedy School-ல் பொது நிர்வாகத்திலும் முதுகலை பட்டம் பெற்றார்.

அரசியல் பயணம்
2011-ம் ஆண்டு PAP கட்சியின் சார்பில் அரசியலில் நுழைந்த இவர், கலாசாரம், சமூக மற்றும் இளைஞர் அமைச்சகம், தேசிய வளர்ச்சி, கல்வி, நிதி எனப் பல்வேறு அமைச்சகப் பணிகளில் பணியாற்றினார். 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது, அரசின் பன்முக அமைச்சகக் குழுவின் இணைத் தலைவராக இருந்து பெரும் பங்காற்றினார்.
2021-ம் ஆண்டு நிதி அமைச்சராகவும், 2022-ம் ஆண்டு துணை பிரதமராகவும், 2024-ம் ஆண்டு மே 15 அன்று பிரதமராகவும் பதவியேற்றார். தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் வெற்றிப் பெற்று சிங்கப்பூர் பிரதமராகத் தன் பணியை தொடங்குகிறார். சிங்கப்பூரின் வளர்ச்சி மற்றும் நவீன அரசியல் மாற்றங்களில் லாரன்ஸ் வாங்கின் பங்கு முக்கியமானது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.