நவீன கிரிக்கெட்டின் ஜாம்பாவான் என அழைக்கப்படுபவர் விராட் கோலி. இவர் தனது கிரிக்கெட் கரியரில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இன்னும் பல சாதனைகளை படைத்தும் வருகிறார். இந்திய அணியை கேப்டனாக தோனிக்குப் பிறகு, விராட் கோலி வழிநடத்தி வந்தார்.
இருப்பினும், கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினார். அதன் பின், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார். அதன் பின்னர் ஓராண்டு கழித்து டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகினார்.
இந்த நிலையில், இந்திய அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இருந்தது ஒரு கட்டத்தில் மிகவும் கடினமாக மாறியதாக விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பேசிய விராட் கோலி, ஒரு கட்டத்தில் கேப்டன் பொறுப்பு எனக்கு மிகவும் கடிமனமானதாக மாறியது. ஏனென்றால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அளவுக்கு அதிகமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. 7 முதல் 8 ஆண்டுகளாக இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திக் கொண்டிருந்தேன். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக 9 ஆண்டுகள் செயல்பட்டுள்ளேன். நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது.
அனைவரது கவனமும் என் மீது இருந்துகொண்டே இருந்தது. கேப்டன் பொறுப்பு மீது கவனம் கொடுக்கப்படாத தருணங்களில் என்னுடைய பேட்டிங் மீது கவனம் கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக என் மீது கவனம் செலுத்தும்போது ஒரு கட்டத்தில் எனக்கு அது மிகவும் கடினமாக மாறியது. இறுதியில் அது அளவுக்கு அதிகமானதாக மாறியது.
என் மீதான கவனம் அளவுக்கு அதிகமாக அதிகரித்ததன் காரணத்தினாலேயே கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன். ஏனென்றால் நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்க வேண்டும் என விரும்பினேன். என் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி, என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என விரும்பினேன் எனத் தெரிவித்தார்.
மேலும் படிங்க: இறுதி கட்டத்தில் ஐபிஎல் 2025.. பிளே ஆஃப் செல்லப்போகும் அந்த 4 அணி எது?
மேலும் படிங்க: CSK ஓபனிங்கில் பெரிய மாற்றம்…? கேகேஆர் நாக்அவுட் செய்ய சூப்பர் வாய்ப்பு!