புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தந்ததை நிறுத்தியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இது குறித்து பேசியதாவது: “இப்போதெல்லாம், ஊடகங்களில் தண்ணீர் பற்றி நிறைய விவாதங்கள் நடக்கின்றன. முன்பு, இந்தியாவின்அடிப்படை உரிமையாக இருந்த தண்ணீர் கூட நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. இப்போது, இந்தியாவின் தண்ணீர் இந்தியாவின் நலனுக்காக பயன்படப் போகிறது. அது இந்தியாவின் நலனுக்காகப் பாதுகாக்கப்படும். இந்தியாவின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும்.
ஒரு காலத்தில், எந்தவொரு அத்தியாவசிய நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்பு, உலகம் என்ன நினைக்கும் என்று சிந்தித்தனர். தங்களுக்கு வாக்கு கிடைக்குமா, தங்கள் நிலை பாதுகாப்பாக இருக்குமா என்று அவர்கள் சிந்தித்தார்கள். இந்தக் காரணங்களால், பெரிய சீர்திருத்தங்கள் தாமதமாகின. எந்த நாடும் இப்படி முன்னேற முடியாது. நாம் தேசத்துக்கு முன்னுரிமை கொடுக்கும்போதுதான் முன்னேறும்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
பின்னணி என்ன? – கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. சிந்து நதி கட்டமைப்பில் புதிதாக 6 அணைகளை கட்டவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
சிந்து நதி கட்டமைப்பில் சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 6 நதிகள் உள்ளன. கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போதே சிந்தி நதி நீர் பிரச்சினை எழுந்தது. அப்போது நாடு நாடுகளுக்கும் இடையே தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தானது. 1948 மார்ச் 31-ல் ஒப்பந்தம் காலாவதியானது. அதன்பிறகு இந்தியாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்தது. சுமார் 17 லட்சம் ஏக்கர் வேளாண் சாகுபடி பாதிக்கப்பட்டது.
இதன்பிறகு உலக வங்கியின் சமரசத்தின்பேரில் இந்தியா, பாகிஸ்தான் இடையே சுமார் 10 ஆண்டுகள் நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்படி கடந்த 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி இரு நாடுகளிடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய இந்திய பிரதமர் நேரு, அன்றைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.