"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டாம்" – உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் நாங்கள் உரிய வேலை செய்யாத வண்ணம் கேரளா அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது.

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறும் வகையில்தான் கேரளா அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.

முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

மரங்களை வெட்டுவது போன்ற அடிப்படை வேலைகளைக் கூடச் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். கேரளா அரசு இப்படி முட்டுக்கட்டை போடும்போதெல்லாம் உச்ச நீதிமன்றத்தை நாடியே நாங்கள் நிலைமையைச் சமாளித்து வருகிறோம்.

எனவே இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வாக உரிய உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என வாதங்களை முன்வைத்தனர்.

நிலைப்பாட்டை மாற்றிய கேரளா அரசு!

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, “முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி கடந்த மாதம் 22-ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை மற்றும் பேபி அணை பராமரிப்பு ஆகியவை குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டும் அதனைக் கேரளா அரசு பின்பற்றவில்லை.

தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் அதிகாரிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட போதும் கேரளா அரசு அதனை ஏற்கவில்லை.

முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

கேரள அரசின் நடவடிக்கையால் அணையின் பராமரிப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அணை பராமரிப்புக்கு முதலில் அனுமதி அளிப்பதாகக் கூறிய கேரளா பிறகுத் திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

முல்லைப் பெரியாறு அணையைப் பொருத்தமட்டில் மூன்று பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழு ஆய்வு செய்து முடித்துள்ளது.

அணையின் மதகுகள் சரியாகச் செயல்படுகிறதா என்பதும் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப் பணிகளின் போதெல்லாம் இரண்டு மாநில அதிகாரிகளும் இருந்திருக்கின்றனர்.” என வாதங்களை முன்வைத்தார்.

கேரளா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அதன் நீர்மட்டத்தை அதிகரிக்க மட்டும்தான் தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது.

அணையைப் பலப்படுத்துவது போன்றவற்றில் அவர்களுக்கு அக்கறை இல்லை அணையின் பலவீனமான நிலைமை குறித்து அவர்கள் கவலை கொள்வதும் இல்லை.” எனத் தெரிவித்தார்

பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுக்கு நோ!

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் மத்திய அரசாகிய நீங்கள் ஏன் குழுவை அனுப்புகிறீர்கள். நீங்கள்தான் நேரடியாகச் சென்று அதனைச் சரிசெய்து கொடுத்திருக்க வேண்டும்.

அதனைச் செய்யத் தவறி விட்டீர்கள். அணை பிரச்னையைத் தீர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுதான் இத்தனைக்கும் பொறுப்பேற்றுத் தீர்த்து வைத்திருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஏற்கனவே அணை விவகாரத்தில் முன்னதாக இரண்டு தீர்ப்புகளை வழங்கியிருந்தோம் (உச்ச நீதிமன்றம்).

மூன்றாவதாக ஏதேனும் எதிர்பார்த்தீர்கள் என்றால் அதனை வழங்கவும் தயாராக இருக்கிறோம். முல்லைப் பெரியாறு அணையை முழுமையாகப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

புதிய அணை கட்டப்பட வேண்டும் என்பதற்காகச் சில மனுதாரர்கள் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டை முன்வைக்க அனுமதி கிடையாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

யாரும் அச்சப்பட வேண்டாம்!

பிறகு விரிவான உத்தரவை வாசித்த நீதிபதிகள், “முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொருத்தமட்டில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

எனவே இந்த வழக்கை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் முல்லைப் பெரியாறு அணையைப் பராமரிக்க மேற்பார்வைக் குழுவால் கடந்த மாதம் 25-ம் தேதி வழங்கப்பட்ட பரிந்துரைகளைக் கேரளா அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு, அதற்கான ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட மேற்பார்வைக் குழு பரிந்துரைகளைக் கேரளா மாநில அரசு அடுத்த இரண்டு வாரத்தில் செயல்படுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

அணையில் நிகழ் நேரத்தின் மழை அளவை இரண்டு மாநில அரசுகளும் பதிவு செய்ய வேண்டும். பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

பெரியாறு அணை குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில் அணை ஆயிரம் ஆண்டுகளின் பாதுகாப்பான கட்டுமானம் ஆகும்.

எனவே இந்த விவகாரத்தில் தேவையற்ற கருத்துக்களை யாரும் தெரிவிக்க வேண்டாம்” என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.