ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் – பலி 15 ஆனது; 43 பேர் காயம்

புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் இந்தியர்களை மீது குண்டு வீசித் தாக்கியதில் குழந்தைகள் உட்பட 15 உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்துள்ளனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்திய எல்லைக் கிராமங்களில் பீரங்கிகள் மூலம் குண்டு வீசித் தாக்கியுள்ளன.

இது குறித்து இந்திய ராணுவத்தினர் கூறும்போது, “மே 6 – 7 இடைப்பட்ட நாளில், எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் உள்ள நிலைகளில் இருந்து பாகிஸ்தான் தன்னிச்சையாக பீரங்கி குண்டுகள் வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது” என்றனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட பூஞ்ச்: பாகிஸ்தானின் குண்டுவீச்சுத் தாக்குதலில் காஷ்மீரில் இருக்கும் பூஞ்ச் மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. உயிரிழந்த 15 பேரும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களே. அதேபோல் காயம் அடைந்த 46 பேரில் 30 பேர் பூஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். காயம்பட்டவர்களில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

பாலகோட், மென்தார், கிருஷ்ணா காதி, குல்புர், கேர்னி மற்றும் பூஞ்ச் மாவட்டத் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துகள் முதலியன பாகிஸ்தான் குண்டுவீச்சினால் சேதமடைந்துள்ளன. குப்வரா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் ஐந்து குழந்தைகள் உட்பட 10 பேர் மற்றும் ராஜோரியில் மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

எல்லைப்புரத்து கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ஹுசைன் என்பவர் கூறுகையில், “திடீரென எல்லைபுரத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடந்தது. இங்குள்ளவர்களுக்கு அந்த இரவு மிகவும் பயங்கரமானதாக இருந்தது” என்றார். குண்டுவீச்சில் காயமடைந்த பெண் ஒருவர் கூறுகையில், “அதிகாலையில் குண்டுகள் வந்து விழுந்தன. எங்களுடைய வீடு முற்றிலும் அழிந்துவிட்டது. இப்போது நாங்கள் எங்கு போவது என்று தெரியவில்லை” என்றார்.

இதனிடையே, இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், “பூஞ்ச் – ராஜோரி பகுதியில் உள்ள பீம்பர் பகுதியில் பீரங்கித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது. கடந்த 2021, பிப்ரவரி 25-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான 2003 போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் உறுதி செய்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்த மீறல் மிகவும் அரிதாகவே இருந்து வந்தது. தற்போது அந்த நிலைப்பாடு மாறியிருப்பதாக தெரிகிறது.

ஆபரேஷன் சிந்தூர் – ‘இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின. மொத்தத்தில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை. அத்துமீறல் இல்லாதவை. இந்தத் தாக்குதலில் எந்த பாகிஸ்தானிய ராணுவ நிலைகளும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், தாக்குதலை செயல்படுத்தும் முறையிலும் இந்தியா நிதானத்தைக் கடைபிடித்துள்ளது.

25 இந்தியர்களும், ஒரு நேபாளத்தைச் சேர்ந்தவரும் கொல்லப்பட்ட இரக்கமற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படும்’ என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. வாசிக்க > 25 நிமிடங்கள், அழிக்கப்பட்ட 9 முகாம்கள், கொல்லப்பட்ட 70 பயங்கரவாதிகள்… – ‘ஆபரேஷன் சிந்தூர்’ அதிரடிகள்!

பாகிஸ்தான் சொல்வது என்ன? – பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் ஆயுதங்களை நிலைநிறுத்தி, சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள மக்களை குறிவைத்துத் தாக்கியது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயலாகும். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பிரிவு 51 மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, தேவையான நேரத்தில் திருப்பித் தாக்கும் உரிமை என்பது பாகிஸ்தானுக்கும் உண்டு. இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே காரணம்’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு பாகிஸ்தான் தனியாக சம்மன் அனுப்பி இந்தியாவின் தாக்குதலுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அத்துடன், இந்தத் தாக்குதல் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்கை. இந்தியாவின் இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர்’ என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.