ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
இத்தகைய சூழலில், சரியாக பஹல்காம் தாக்குதல் நடந்த 15 நாள்களில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது (மே 7).

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் பற்றி டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நேற்றிரவு, நமது இந்திய ஆயுதப்படைகள் தங்களின் வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தி, ஒரு புதிய வரலாற்றைப் படைத்தன. மிகத் துல்லியமாகவும், எச்சரிக்கையுடனும் நடவடிக்கை எடுத்தன.
சரியான நேரத்தில் மிகத் துல்லியமாக இலக்குகளை அழிக்கத் தீர்மானித்தோம். அதேசமயம், பொதுமக்கள் இதில் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் நமது ஆயுதப்படைகள் சென்சிட்டிவாக இருந்தன.
நம் இந்திய வீரர்கள் துல்லியம், எச்சரிக்கை, மனிதாபிமானம் ஆகியவற்றைக் காட்டினர். மொத்த நாட்டின் சார்பாக, வீரர்களையும் அதிகாரிகளையும் நான் வாழ்த்துகிறேன்.
அசோக வனத்துக்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையைத்தான் நாங்கள் பின்பற்றினோம். எங்கள் அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே நாங்கள் குறிவைத்தோம்.

பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஆபரேஷன் சிந்தூர் மூலம், தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை நமது ஆயுதப்படைகள் அழித்துவிட்டன. தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க, இந்தியா தனது உரிமையைப் பயன்படுத்தியிருக்கிறது.
தீவிரவாதிகளின் மனஉறுதியை உடைக்கும் நோக்கத்தில் அவர்களின் முகாம்கள் மீது மட்டுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.” என்று கூறினார்.