காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்ற கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா இன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி தகுந்த பதிலடி கொடுத்தது. இந்த நடவடிக்கையின்போது 9 பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா முற்றிலுமாக அழித்தது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பெரும் பதற்றம் நீடித்து வரும் சூழலில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளின் அட்டவணையிலும் பெரிய மாற்றம் நிகழப்போகிறது. ஐபிஎல் 18வது சீசனின் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் தர்மசாலாவில் நடக்க இருந்த இரண்டு போட்டிகள் இட மாற்றம் செய்வது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 அட்டவணையில் மாற்றம்
மே 8 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுமா? நடைபெறதா? அல்லது மைதானம் மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்தப் போட்டி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. தர்மசாலா இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து வெறும் 60 கி.மீ தொலைவில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழலில், இந்த இடத்தில் 20,000 க்கும் மேற்பட்டோர் கூடுவது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
மும்பை – பஞ்சாப் போட்டி மாற்றம்
அதேபோல், தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தர்மசாலா பஞ்சாப் கிங்ஸின் இரண்டாவது சொந்த மைதானம். ஐபிஎல் 2025ல் அந்த மைதானத்தில் 3 போட்டிகளை விளையாட திட்டமிட்டிருந்தது. இருப்பினும், இடம் மாற்றுவது குறித்து பிசிசிஐ இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பிசிசிஐ ரியாக்ஷன் என்ன?
‘ஐபிஎல் திட்டமிட்டபடி நடக்கும் – கவலைப்பட ஒன்றுமில்லை’ என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நம் நாட்டின் ஆயுதப் படைகள் மற்றும் அரசாங்கத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், வரவிருக்கும் போட்டிகளுக்கு தர்மசாலாவில் முழு பாதுகாப்பு மத்திய அரசு கொடுக்கும் என பிசிசிஐ தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தர்மசாலாவுக்கு ஐபிஎல் அணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மைதானம் மாற்றம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் அவர்களை முதலிடத்திற்கு செல்ல முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணி 11 போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. அக்சர் படேல் தலைமையிலான அணி ஒரு கட்டத்தில் முதலிடத்தில் இருந்தது. DC அணி தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது, அடுத்த சுற்றில் தங்கள் இடத்தைப் பிடிக்க அந்த அணிக்கு கட்டாயம் இரண்டு வெற்றிகள் தேவை.