புதுடெல்லி: தற்போதைய பாதுகாப்புச் சூழல் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சிவில் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகள் 1968-ன் கீழ் சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சிவில் பாதுகாப்பு சட்டம் 1968-ன் பிரிவு 11-ஐ சுட்டிக்காட்டி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்பை அதிகரித்தல் என்ற தலைப்பில் உள்துறை அமைச்சகம் எழுதியிருக்கும் கடிதத்தில், மக்கள் மற்றும் சொத்துகளின் பாதுகாப்புக்காகவும், எதிரிகளின் தாக்குதலின்போது அத்தியாவசிய வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. உள்துறை அமைச்சகம் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘தற்போது நிலவிவரும் தாக்குதலுக்கான அச்சுறுத்தல் சூழலில், சிவில் பாதுகாப்பு சட்டம் 1968 பிரிவு 11-ல் உங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம். இது மமாநில அரசுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் வழங்குகிறது.
மாநில அரசின் கருத்துப்படி, மக்கள் மற்றும் சொத்துகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், ஒருவேளை எதிரிகளின் தாக்குதல் நடந்தால், அத்தியாவசிய தேவைகள் தடைபடாமால் கிடைத்திடுவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுப்பகவும் வழிவகை செய்கிறது. உள்ளூர் நிர்வாக சபையின் நிதிகள், அவசர கால செலவுகளுக்கு எடுத்துக்கொள்ள முடியும், மற்ற அனைத்து செலவுகளையும் விட சேதங்களுக்கு செலவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிப்பைக் குறைப்பதற்கு உள்ளூர் அளவில் குறித்த நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் நாட்டின் வடமேற்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் வியாழக்கிழமை இரவு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிலையில் சிவில் பாதுகாப்புக் குறித்த இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் தாக்குதல்களில் பெரும்பாலானவை எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உட்பட இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு பெரும் சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்கள், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளன. இந்த எதிரெதிர் தாக்குதல்கள் இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இரு நாடுகளும் விதிகளை மீறிவிட்டதாக மற்றவரைக் குற்றம்சாட்டி வருகின்றன. சூழல் இன்னும் கொந்தளிப்பில் இருந்துவரும் நிலையில், பதற்றத்தை தணிக்கும் படியும், ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடவும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. | வாசிக்க > 36 இடங்களை குறிவைத்த பாகிஸ்தானின் 300+ ட்ரோன்களை வீழ்த்தியது இந்தியா: கர்னல் சோபியா குரேஷி விவரிப்பு