எதிரிகளால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி சர்வதேச அமைப்புகளிடம் பாகிஸ்தான் நிதி உதவி கோரிவிட்டு பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்தது. நிதி உதவி கோரி சமூக வலைதள பதிவு வெளியான நிலையில், தங்களது எக்ஸ் கணக்கை முடக்கி யாரோ அவ்வாறு பதிவிட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
பாகிஸ்தான் பொருளாதார விவகாரப் பிரிவு எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “ எதிரிகளால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச பங்குதாரர்களிடம் இருந்து அதிக கடன்களை எதிர்பார்க்கிறோம். பங்குச் சந்தை சரிவு, போர் சூழல் முற்றி வருவதையடுத்து பதற்றத்தை தணிக்க சர்வதேச பங்குதாரர்கள் உதவ வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு வைரலானதையடுத்து, பாகிஸ்தான் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சகம் உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்தது. தங்களது எக்ஸ் பக்கத்தை முடக்கிய யாரோ இப்படி பதிவிட்டுள்ளதாக கூறியுள்ளது.
இதுகுறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராய்டர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “ ஹேக்கர்களால் முடக்கப்பட்ட பாகிஸ்தான் பொருளாதார விவகார அமைச்சக கணக்கை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இதற்காக எக்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளோம்” என்றார். ஒருபக்கம் சர்வதேச அமைப்புகளிடம் நிதியுதவி கோரிவிட்டு மறுபக்கம் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் தர்மசங்கடமான நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் அதிக கடன்பெற்ற நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. 8.8 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இதுதொடர்பாக, கிரெடிட் ரேட்டிங் நிறுவனமான மூடிஸ் பாகிஸ்தானுக்கு முன்னரே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுடன் மோதல் முற்றினால் அது பாகிஸ்தான் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். பாகிஸ்தானை அது மீண்டும் திவால் நிலைக்கு கொண்டு சென்று விடும் என மூடிஸ் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.