புதுடெல்லி: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் அமைதியாகவும், நிதானமாகவும் இந்தச் சூழலில் இருந்து உரிய முறையில் சமுகத் தீர்வு காண வேண்டும்.” என சீனா வலியுறுத்தி உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது தங்களுக்கு கவலை அளிப்பதாக சீன வெளியறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இரு நாடுகளும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை சார்ந்து செயல்படவும், அமைதியை கடைப்பிடிக்கவும், சுமுகமான வழியில் அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காணவும், பதற்றத்தை மேலும் அதிகரிக்க வேண்டாம் என வலியுறுத்துகிறோம்.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “பாகிஸ்தானின் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டக் கூடியதாகவும், பதற்றத்தைத் தீவிரப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதை இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் நான் சுட்டிக்காட்டி உள்ளேன். இதற்கு இந்தியா பொறுப்புடனும், அளவிடப்பட்ட முறையிலும் பாதுகாப்புக்கான எதிர்வினையை ஆற்றி உள்ளது.” என்று விளக்கமளித்திருந்தது கவனிக்கத்தக்கது.
இந்தியா – பாக். மோதல்: நடப்பது என்ன? – கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது.