இந்தியாவின் முக்கிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் செலுத்திய ஏவுகணைகளையும், வான் பாதுகாப்பு ரேடார்களையும் வானிலே தாக்கி அழித்த தற்கொலை படை ட்ரோன்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த ட்ரோன்கள் பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட ‘‘ஸ்கை ஸ்ட்ரைக்கர்ஸ்’’ ட்ரோன்கள் என தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பாதுகாப்பு படைகள் மேற்கொண்டுள்ள ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட தற்கொலை படை ட்ரோன்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. பாகிஸ்தான், இந்தியா மீது ஏவிய ஏவுகணைகள், பாக், வான் பாதுகாப்பு ரேடார்களையும் தாக்கி அழித்ததில் ஆளில்லா தற்கொலை படை ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன. இது மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே ஆகிய இடங்களில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களையும் துல்லியமாக தாக்கி அளித்தன.
ஸ்கை ஸ்ட்ரைக்கர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த தற்கொலை படை ட்ரோன்கள் எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலே அழிப்பதுடன், எதிரி நாட்டின் இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. அதனால் இந்திய பாதுகாப்பு படை முதல் முறையாக, பயங்கரவாத முகாம்களை அழிக்கும் பணியில் இந்த ட்ரோன்களை பயன்படுத்தின.
முன்னாள் வீரர்களின் தயாரிப்பு: ஸ்கை ஸ்ட்ரைக்கர்ஸ் என அழைக்கப்படும் ஆளில்லா தற்கொலை படை ட்ரோன்கள் பெங்களூருவில் உள்ள ஆல்ஃபா டிசைன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. அந்த நிறுவனம் இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனை உருவாக்கியது.
ஆல்ஃபா டிசைன் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஓய்வுபெற்ற கர்னல் எச்.எஸ்.சங்கர் உள்ளிட்ட பாதுகாப்பு படை வீரர்களால் உருவாக்கப்பட்டது. போர்க்களத்தில் படை வீரர்கள் சந்திக்கும் சிக்கல்களை கவனத்தில் கொண்டு, படை வீரர்கள் இந்த ஆளில்லா தற்கொலை படை ட்ரோன்களை வடிவமைத்ததாக கூறப்படுகிறது.
கர்னல் எச்.எஸ்.சங்கர் ஆல்ஃபா டிசைன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக உள்ளார். அவருடன் விமானப்படையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பொறியாளர்களும், படை வீரர்களும் பணியாற்றுகின்றனர். முன்னாள் படை வீரர்களின் மூளையில் இந்த கருவி குறித்த கரு உருவானது. அதனை இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். இந்த நிறுவனத்தில் தயாரிப்பால் ஈர்க்கப்பட்ட அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் அதன் 26 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த தலைமுறை ஆயுதம்: 2021ம் ஆண்டில் நடந்த பாலகோட் தாக்குதலுக்குப் பின்னர், இந்த ட்ரோனின் தேவையை பாதுகாப்புத்துறை உணர்ந்தது. அதனால் உடனடியாக 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொள்முதல் செய்தது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் போர்க்களத்தில் வானில் வட்டமிட்டு எதிரிகளின் இலக்குகளைக் கண்டறிந்து, அவற்றை வெடிபொருட்களால் அழிக்கும் திறன் கொண்டது.
ஒவ்வொரு ஸ்கை ஸ்ட்ரைக்கர் ட்ரோனும் 100 கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது. 10 கிலோ வரை வெடி குண்டுகளை கொண்டு செல்லக்கூடியது. அதன் மின்சார உந்துவிசை, குறைந்தபட்ச ஒலி தடத்தை கண்டறிந்து, குறைந்த உயரத்தில் கூட பயணித்து தாக்ககூடியது. இந்த ட்ரோனில் உள்ள ஆட்டோமெடிக் செயல்பாடு, துல்லிய இயங்கு முறை ஆகியவை ஏவுகணை போல தாக்க கூடியது. அதே வேளையில் எதிர்களின் ஏவுகணைளை துல்லியமாக இடைமறித்து தாக்கும் திறன் கொண்டதாக உள்ளது.
இந்த ஆளில்லா தற்கொலை படை ட்ரோன்களின் வருகையால் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரை பணயம் வைத்து, எதிரிகளின் ஏவுகணை தாக்க வேண்டியதில்லை. அந்த வகையில் தற்கொலை படை ட்ரோன்கள் நிறைய பாதுகாப்பு படை வீரர்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளது. எனவே இதனை அடுத்த தலைமுறை ஆயுதம் என போர் தளவாட நிபுணர்கள் கூறுகின்றனர்.