புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அணில் சவுகான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இருதரப்பு மோதலை நிறுத்திக்கொள்வது என இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மோதலை முடிவுக்குக் கொண்டு வர உதவியதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ஆயுதப் படைகள் ட்ரோன் தாக்குதலை நடத்தின. இதனால், மீண்டும் ஒரு பதற்றச் சூழல் உருவானது.
எனினும், இன்று காலை முதல் எல்லையோர பகுதிகளில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, ராணுவ மோதல் காரணமாக அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் திரும்பப் பெற்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அணில் சவுகான், முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் நிலைகளைக் குறிவைத்து கடந்த 7ம் தேதி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே, துப்பாக்கிச்சூடு மற்றும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்திருந்தார். மேலும் பயங்கரவாதத்தின் அனைத்து நிலைகளுக்கு எதிரான நிலைப்பாட்டினை இந்தியா சமரசமின்றி தொடரும் என்று தெரிவித்திருந்தார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “துப்பாக்கிச் சூட்டினை நிறுத்துதல் மற்றும் ராணுவ நடவடிக்கை குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பராமரித்து வருகிறது. அது தொடர்ந்து அவ்வாறு செய்யும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் டிஜிஎம்ஓக்கள் துப்பாகிச்சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள இந்திய பாகிஸ்தான் தரப்புகள் ஒத்துக்கொண்டதைத் தொடர்ந்து அமைச்சர் இவ்வாறு தெரிவத்திருந்தார்.
முன்னதாக, வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் (DGMO) இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய DGMO-வை அழைத்தனர். இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் நிறுத்துவதாக அவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் மே 12-ஆம் தேதி 12 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களுக்குள் “இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வை பாகிஸ்தான் மீறி வருகிறது. இந்திய ராணுவம் இந்த எல்லை ஊடுருவலுக்கு பதிலடி கொடுத்து சமாளித்து வருகிறது. இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று இந்தியா சனிக்கிழமை குற்றம்சாட்டியிருந்தது.
இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை சரியாகப் புரிந்துகொண்டு, இந்த ஊடுருவலைத் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.