புதுடெல்லி: ஊடுருவலுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை இந்தியா கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் டிஜிஎம்ஓ பேச்சுவார்த்தையின்போது இந்தியா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (DGMOs) இடையே இன்று மாலை ஹாட்லைன் மூலம் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த வாரம் நடந்த ராணுவ மோதல் நிறுத்தப்பட்டதை அடுத்து, முதல்முறையாக இந்த உரையாடல் நிகழ்ந்தது.
கடந்த 10-ம் தேதி பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ, இந்தியாவின் டிஜிஎம்ஓவை தொடர்பு கொண்டு ராணுவ மோதலை நிறுத்திக்கொள்ள கோரியதை ஏற்று இந்தியா அதற்கு ஒப்புதல் அளித்தது. 10-ம் தேதி மாலை 5 மணியோடு இரு தரப்பும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும், அன்று இரவு பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. எனினும், 11-ம் தேதி காலை முதல் எல்லையில் அமைதி நிலவுகிறது. கடந்த 10-ம் தேதி நடந்த உரையாடலின்போது, இரு நாடுகளின் டிஜிஎம்ஓக்கள் மட்டத்தில் இன்று (மே 12) மதியம் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும், அது தள்ளிப்போடப்பட்டு இன்று மாலை நடந்தது.
இந்த உரையாடலின்போது, எல்லையில் நிகழும் ஊடுருவல்களுக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை குறித்து பாகிஸ்தான் தரப்புக்கு தெரிவிக்கப்பட்டது. ஊடுருவல்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும், எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்துவதை நிறுத்த வேண்டும், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதோ அல்லது போதைப் பொருட்களை கடத்துவதோ கூடாது ஆகிய விஷயங்கள் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எல்லையில் அமைதி நிலவ பாகிஸ்தான் ராணுவம் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கக் கூடாது என்றும் உரையாடலில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்தியா – பாகிஸ்தான் இடையே டிஜிஎம்ஓக்கள் மட்டத்தில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும். இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பயங்கரவாதம் போன்ற முக்கிய பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் என்றும் இந்தியா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட மாட்டாது என்றும், 3-வது தரப்பின் மத்தியஸ்தம் ஏற்கப்படாது என்றும் பாகிஸ்தானிடம் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் வரவேற்பு தெரிவித்திருந்தது. மேலும், காஷ்மீர் பிரச்சினைக்கு ஐநா பாதுகாப்பு அவை தீர்மானத்தின் அடிப்படையில் தீர்வு இருக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.