IPL 2025, Royal Challengers Bangalore: இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக மே 9ஆம் தேதி ஐபிஎல் நிர்வாகக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஐபிஎல் தொடரின் மீதமுள்ள 13 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் ஆட்டங்களுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
IPL 2025 RCB: பிளே ஆப் ரேஸ்ஸில் யார் யார்?
பெங்களூரு, டெல்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத், லக்னோ, மும்பை என 6 மைதானங்களில் மட்டுமே மீதமுள்ள 13 லீக் ஆட்டங்களும் நடைபெற உள்ளன. சென்னை, ஹைதராபாத், தரம்சாலா, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் லீக் ஆட்டங்கள் இனி நடைபெறாது. பிளே ஆப் ஆட்டங்கள் எங்கெங்கு நடைபெறும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜூன் 3ஆம் தேதி (செவ்வாய் கிழமை) இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
தற்போதைய சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டன. கொல்கத்தா, லக்னோ அணிகளின் வாய்ப்பும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. குஜராத், ஆர்சிபி, பஞ்சாப், மும்பை, டெல்லி என முறையே இந்த 5 அணிகள்தான் டாப் 5 இடங்களில் தற்போது இருக்கின்றன.
IPL 2025 RCB: ஆர்சிபிக்கு அடுத்தடுத்து வரும் பிரச்னைகள்
அந்த வகையில், ஐபிஎல் தொடரில் இன்னும் ஒவ்வொரு அணிகளுக்கும் குறைந்தது 2-3 போட்டிகளாவது உள்ளன. மேலும், தற்போதைய சூழலில் எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு திரும்புவார்கள் என்பது கேள்விக்குறி என்பதால் ஒவ்வொரு அணிகளுக்கும் இது புதிய தொடக்கமே. புதிய காம்பினேஷனை முயற்சித்து பார்க்க வேண்டும். முக்கிய வீரர்கள் இல்லாதபட்சத்தில் நிச்சயம் பல அணிகள் தோல்விகளை சந்திக்க நேரலாம்.
இதில் ஆர்சிபி அணியே அதிகம் பாதிப்படைய இருக்கிறது எனலாம். இத்தொடரில் நம்பர் 3இல் தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடி வந்தார், தற்போது அவர் காயம் காரணமாக விலக மயங்க் அகர்வால் அந்த இடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளார். ஹேசில்வுட், ஜேக்கப் பெத்தெல், ரொமாரியோ ஷெப்பேர்ட், பில் சால்ட், லியம் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரில் யார் யார் அணிக்கு திரும்புகிறார்கள் என்பதும் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
IPL 2025 RCB: ஜித்தேஷ் சர்மா (அ) குர்னால் பாண்டியா
இதே சூழலில், கேப்டன் ரஜத் பட்டிதாரின் விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. மிச்சமிருக்கும் 3 போட்டிகளில் இவர் ஓய்வெடுப்பாரா அல்லது இம்பாக்ட் வீரராக களமிறங்குவாரா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, ரஜத் பட்டிதார் இல்லாத சூழலில் ஆர்சிபிக்கு கேப்டன்ஸியை கவனிக்கப்போவது யார் என்ற கேள்வியும் எழுகிறது.
விராட் கோலி, புவனேஷ்வர் குமார் போன்ற மூத்த வீரர்கள் இருந்தாலும் நிச்சயம் ஆர்சிபி அணி புதிய தலைமைக்கே யோசிக்கும். அந்த வகையில், உள்ளூர் தொடர்களில் பரோடா அணிக்கு கேப்டனாக இருக்கும் குர்னால் பாண்டியாவுக்கோ அல்லது விக்கெட் கீப்பர் பேட்டர் ஜித்தேஷ் சர்மாவுக்கோ தான் செல்லும் எனலாம். இருவருமே நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்பதால் நிச்சயம் இந்த இருவரில் ஒருவருக்குதான் வாய்ப்பு என்பது உறுதி!