புதுடெல்லி: சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸின் எக்ஸ் கணக்கை இந்திய அரசு முடக்கியுள்ளது. அதேபோல், துருக்கியின் டிஆர்டி வோர்ல்ட்-ன் எக்ஸ் கணக்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல்களை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளை சரிபார்த்து, ஆதாரங்களை மறுவிசாரணை செய்யுமாறு சீனாவை இந்தியா எச்சரித்திருந்த சில நாட்களுக்கு பின்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (மே 7 ) சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “டியர் க்ளோபல் டைம்ஸ் ஊடகத்துக்கு, தவறாக வழிநடத்தும் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு, உண்மைகளை சரிபார்த்து, உங்களின் ஆதாரங்களை குறுக்கு விசாரணை செய்து கொள்ளுங்கள் என்று நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.
பல பாகிஸ்தான் ஆதரவு தளங்கள், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய ஆதாரமற்ற தகவல்களை பரப்புகின்றன. ஊடக நிறுவனங்கள் இதுபோன்ற தகவல்களை சரிபார்க்காமல் பகிரும் போது அது ஊடக நிறுவனங்களின் பொறுப்பு மற்றும் ஊடக நெறிமுறைகளில் உள்ள குறைபாட்டினையே பிரதிபலிக்கும்.” என்று தெரிவித்திருந்தது.
முன்னதாக எக்ஸ் நிறுவனம் அதன் க்ளோபல் கவர்ண்மெண்ட் அஃபேர் கணக்கு மூலமாக, இந்தியாவின் அறிவுறுத்தலின்படி 8,000 எக்ஸ் கணக்குகளை இந்தியாவில் தடுத்து நிறுத்துவதாக மே 8-ம் தேதி தெரிவித்திருந்தது.
இதனிடையே, திங்கள்கிழமை, ஆசிய விவகாரங்களுக்கான சீனாவின் மூத்த வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி லியு ஜின்சாங், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதல்களுக்கு மத்தியில், சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத்தைச் சந்தித்து, இரு தரப்புகளுக்கு இடையையான பிரச்சினைகள் மற்றும் பொதுவான கவலைகள் குறித்து விவாதித்தார்.
ஆபரேஷன் சிந்தூர்: ஏப்.22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தின் கீழ் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மே 8, 9, 10-ம் தேதிகளில் இந்திய ராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸின் எக்ஸ் கணக்கு மற்றும் துருக்கியின் டிஆர்டி வோர்ல்ட்-ன் எக்ஸ் கணக்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. மோதல் பற்றிய அவதூறுகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.