ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் திறக்கப்பட்ட ஸ்ரீநகர் விமானநிலையத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் ஹஜ்-க்கு விமான சேவையைத் தொடங்க ஸ்பைஸ் ஜெட் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தானிடையே நிலவிய பதற்றம் காரணமாக நாட்டில் மூடப்பட்ட 32 விமானநிலையங்களில் ஸ்ரீநகர் விமானநிலையமும் ஒன்று. இந்த விமானநிலையம் குடிமக்களின் பயன்பாட்டுக்கு நேற்று (திங்கள்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது.
ஹஜ் விமான சேவை குறித்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், அதன் ஹஜ் 2025 பயணத்துக்கான விமான இயக்கத்தை ஸ்ரீநகரில் இருந்து மீண்டும் தொடங்க உள்ளது.
ஏ340 விமானம் மூலம் மதினாவுக்கு இரண்டு விமான சேவையை மேற்கொள்ள உள்ளது. ஒவ்வொன்றிலும் 324 பேர் பயணிக்கலாம். இதன் மூலம் 15,500 ஹஜ் புனித யாத்ரீகர்கள் பயன்பெறுவார்கள்.” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில், மதினா மற்றும் ஜத்தாவுக்கு கயா, ஸ்ரீநகர், குவாஹத்தி மற்றும் கொல்கத்தாவில் இருந்து 45 ஹஜ் விமானங்களை இயக்கும் என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனிடையே, ஸ்ரீநகரிஸ் இருந்த திட்டமிட்ட விமான சேவைகளை நாளை தொடங்க இருக்கிறது.